மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு: எழுகிறது விமர்சனம்
மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ராஜகிரியவில் அமைந்துள்ள ரோயல் பார்க் குடியிருப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அன்ரனி ஜயமஹா என்பவருக்கே, இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் டீ.எம்.ஜே.டப்ளியு. தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ரோயல் பார்க் குடியிருப்பு கட்டத்தின் 23ஆவது மாடியில் வசித்து வந்த இவோன் ஜோன்ஸ்டன் என்ற சுவிஸர்லாந்து பிரஜையான 19 வயது யுவதியின் உடல் 19ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்டது.
2005 ஜூலை 01ம் திகதி மேற்படி யுவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றவாளி ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கால சிறை தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து குற்றவாளி மேன்முறையீடு செய்திருந்தார்.
2012ஆம் ஆண்டு மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதன்பின் குற்றவாளி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
அதன்போது வழக்குதாரரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, 2013ஆம் ஆண்டு உறுதி செய்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் உள்ள நிலையில், இவ்வாறானதொரு பொதுமன்னிப்பை அவர் வழங்கியமை குறித்து, பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.