நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு
– பாறுக் ஷிஹான் –
தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு நெருக்கடியான நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்து, அங்கு ரன்முத்துகல சங்க ரத்ன தேரரை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று பொருளாதாரம், நல்லிணக்கம் தொடர்பிலான நெருக்கடி நிலை உணரப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து நாட்டினை பாதுகாக்க பொறிமுறை ஒன்றினை கட்டியெழுப்ப தன்னால் முடியும் எனவும் கூறிய அவர்; முன்னைய அரசாங்க காலத்திலும் அதற்கான சவால்கள் காணப்பட்டதாகவும் எனினும் இன்று அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் திணருகின்றதகாவும் சுட்டிக்காட்டினார்.
எனவே இச்சவாலை வெற்றிக்கொண்டு முன்நோக்கி எதிர்காலத்தில் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகிக்க விருப்பம் இல்லை எனக் கூறிய கப்ரால்; நாட்டை நிர்வகிக்க தான் விரும்புவதாகவும் கூறினார். அது அரசியல் ரீதியாகவா அல்லது உத்தியோகத்தராகவா என காலம் முடிவு செய்யும் என்றும், நாட்டை மீண்டும் கட்யெழுப்ப தானும் துணை நிற்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.