கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு ‘பெயின்ற்’ பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி

🕔 August 24, 2019

பாறுக் ஷிஹான்

டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார்.

இதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து தான் விலகியதாகவும், வடக்கும் கிழக்கு இணைய வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் அவர் கூறினார்.

கல்முனையில் உள்ள வீட்டுத்திட்ட மக்களை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“வடக்கும் கிழக்கும் சேர்ந்தால் எமது சந்ததி அழிந்து விடும்.வடக்கும் கிழக்கும் பிரிந்திருத்தலே நன்று. நான் பசார் பள்ளிவாசல் தலைவராக உள்ளேன். எமது பள்ளிவாசலுக்கு கீழ்தான் கல்முனை அதார வைத்தியசாலையில் உள்ள பள்ளிவாசலும் இருக்கின்றது. மழை பெய்தால் அந்த பள்ளிவாசலின் உள்ளே ஒழுகிறது.

இந்த நிலையில் அந்த பள்ளிக்கு 04 வருடங்களாக ‘பெயின்ற்’ பூச அனுமதிக்கிறார்களில்லை. அங்கே ஒரு கோவில் சிறிதாகவே இருந்தது. ஆனால் இன்று பாரிய கோயிலாக மாறியுள்ளது. எமது பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனப் போனால்  விடுகின்றார்கள் இல்லை.

இப்படியானவர்களுடன் நாங்கள் வடக்கு – கிழக்கில் இணைந்து வாழ வேண்டுமா  என்ற கேள்வி எழுகின்றது” என்றார்.

Comments