நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்
வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம் இந்த குடிநீர் நிலையங்கள் திங்கட்கிழமை திறக்கப்பட்டன.
தலா 15 லட்சம் ரூபா செலவில் நிரமாணிக்கப்பட்ட மூன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மெனிக்பாம், றம்பைவெட்டி, நெடுங்கேணி மருதோடை ஆகிய கிராமங்களிலும் கிராம உட்கட்டமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்காவது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மாதர் பணிக்கர் மகிழங்குளம் கிராமத்திலும் திறக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் பரந்தாமன், வவுனியா நகரசபை உப நகரபிதா குமாரசுவாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரதி தவிசாளர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா தமிழ் பிரிவு அமைப்பாளர் மகேந்திரன், பிரதேச சபை உறுப்பினர்களான திரவியவதனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.