வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு
🕔 October 14, 2015
– முன்ஸிப் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள அரச காணியில் வசித்து வரும் தமக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையானது நியாயமற்ற செயற்பாடாகுமென்று, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் 35 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தமது வாழ்விடங்களை விட்டு, ராணுவத்தினர் தங்களை அடாத்தாக வெளியேற்றியதோடு, அங்கு முகாம்களை அமைத்துள்ளதாகவும், இதனாலேயே, ஒலுவில் பிரதேசத்திலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான அரச காணியில் தாம் குடியேறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் குறித்து அறியவருவதாவது;
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் 1978 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வரும் மக்களில் ஒரு பகுதியினரை, அவர்களின் வாழ்விடங்களிலிருந்து 2011 ஆம் ஆண்டு ராணுவத்தினர் வெளியேற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, இவர்கள் வாழ்ந்த நிலத்தில் ராணுவத்தினர் வேலியிட்டு முகாம் அமைத்துள்ளனர்.
இதனால், தமது வாழ்விடங்களை இழந்த நிலையில், தங்களின் உறவினர்களுடைய வீடுகளில் சில காலம் வசித்து வந்த இந்த மக்கள், சுமார் 03 வருடங்களுக்கு முன்னர,; ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான அரச காணியில் குடியேறி, அங்கு குடிசைகளை அமைத்து தோட்டச் செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் – அரச காணியில் அத்து மீறிக் குடியேறியதாகத் தெரிவித்து, இங்குள்ள 06 பேருக்கு எதிராக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04 ஆம் திகதி, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து இங்குள்ள மக்கள் தெரிவிக்கையில்ளூ ‘நாங்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்த இடங்களிலிருந்து, எங்களை ராணுவத்தினர் வெளியேற்றி விட்டு, அங்கு முகாம் அமைத்துள்ளனர். இதனை யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஆனால், வாழ்விடத்தினை பறிகொடுத்த நிலையில், இங்குள்ள அரச காணியில் நாங்கள் குடியேறியவுடன் எங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றார்கள். இது என்ன நியாயம் என்று தெரியவில்லை’ என்கின்றனர்.
‘எங்கள் வாழ்விடங்களை அரசாங்க ராணுவம் கையகப்படுத்திக் கொண்டதால்தான், நாங்கள் அரச காணியொன்றில் குறியேற நேர்ந்தது. இப்போது, இங்கு குடியேறியுள்ள எங்களை வெளியேறச் சொன்னால், நாங்கள் எங்கே போவது’ என்றும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இதேவேளை, இங்குள்ள அரச காணிகளில் சில பகுதிகளை அரசாங்க அதிகாரிகள் சிலர் முறையற்ற ரீதியில் கைப்பற்றி வைத்துள்ளனர் என்றும், அவர்களுக்கு எதிராக யாரும் சட்ட நடவடிக்கை எடுக்காமல், தமக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது ஏன் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வினவுகின்றனர்.
இதேவேளை, தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்குரிய நிதி பலம் கூட தம்மிடம் இல்லை என்றும், இவ் விடயம் தொடர்பில் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் குறித்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விவகாரம் குறித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபாவிடம் கேட்டபோதுளூ ‘எமது நிருவாகத்துக்குட்பட்ட அரச காணிகளில் சட்ட விரோதமாக யாராவது குடியேறுவார்களாயின், ஒரு பிரதேச செயலாளர் என்கிற வகையில், அவ்வாறான நபர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது எனது கடமையாகும்’ என்று தெரிவித்தார்.