முஸ்லிம்களுக்கு எதிரான மிரல்டல்கள் அதிகரித்துள்ளன; உன்னிப்பாய் அவதானிக்கிறோம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிப்பு

🕔 July 5, 2019

லங்கையிலுள்ள சில குழுக்கள் முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுப்பதும், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றமையும் அதிகரி்த்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ள ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, இந்த விவகாரங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

57 முஸ்லிம் நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வருகின்றது.

மே மாதம் 31ஆம் தேதி மக்காவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 14ஆவது மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, அவர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கும், அந்த நாட்டின் பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும் என்பதை, மீளவும் வலியுறுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள் முக்கியமானதொரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் இலங்கையின் ஒட்டுமொத்த கலாசாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்” என்றும் ஓ.ஐ.சி. அமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீளவும் வலிறுத்துவதாகத் தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, “பயங்கரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது. தீவிரவாத நடவடிக்கைகளை எந்த சமூகமும் பொறுப்பேற்ற முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒ.ஐ.சி. அமைப்பினுடைய நாடுகளின் கொழும்பிலுள்ள தூதுவர்களை இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அண்மையில்  சந்தித்தமை குறித்து தனது பராட்டினை தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அனைத்து சமூகங்களிடையேயான உரையாடல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் மக்கள் களங்கப்படுத்தப்படுவதையோ அல்லது ஓரங்கட்டப்படுவதையோ தடுப்பதற்கான செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் தாம் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்