மூத்த நடிகை மனோரமா மரணம்

🕔 October 11, 2015

Manorama - 01மிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா நேற்று சனிக்கிழமை இரவு தனது 78 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

அதிக திரைப்படங்களில் நடித்தவர் எனும் வகையில், இவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1500 படங்களுக்கு மேல் இவர் நடத்துள்ளார்.

நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு இவர் மரணமானார்.

மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா. இவரது பெற்றோர் காசி கிளாக் உடையார் மற்றும் ராமாமிர்தம். இந்தியாவின் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிறந்த மனோரமா, சிறு வயதில் வறுமை காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தார். படிக்கும்போதே மேடை நாடகங்களில் பாட்டு பாடி நடிக்கத் தொடங்கினார். கவியரசு கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் முதன்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்தியாவின் தேசிய விருதான பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 1989-இல் நடிகர் பார்த்திபனின் புதிய பாதை படத்தில் நடித்ததமைக்காக சிறந்த குணசித்திர நடிகை என்ற தேசிய விருதைப் பெற்றார். இயக்குநர்கள் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களின் படங்களில் நடித்தவர். குறிப்பாக, பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகையாகவே நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிகை மனோரமா பாடிய பாடல்களும் பிரபலமானவை. ‘வா வாத்தியாரே’ (பொம்மலாட்டம்), ‘தில்லிக்கு ராஜான்னாலும்’ (பாட்டி சொல்லைத் தட்டாதே) ‘மெட்ராச சுத்திப் பாக்க’ (மே மாதம்), ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ (சூரியகாந்தி), ‘பார்த்தாலே தெரியாதா’ (ஸ்ரீ ராகவேந்திரா) உள்ளிட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்