தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்
– முன்ஸிப் –
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று சனிக்கிழமை உத்தரவிட்டார்.
பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைது செய்த அக்கரைப்பற்றுப் பொலிஸார், இன்று சனிக்கிழமை, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேற்படி குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 மாணவர்கள், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது மேலும் இரு மாணவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் தமக்கு விடுதி வசதிகளைச் செய்து தருமாறு கோரி, கடந்த 01 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, அவர்கள் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பல்கலைக்கழக நிருவாகத்தினர் முறையிட்டிருந்தனர்.
இதனையடுத்து, கடந்த 06 ஆம் திகதி இச்சம்பவத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் 13 மாணவர்களை பொலிஸார் கைது, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, குறித்த சந்தேக நபர்களை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையிலேயே, தற்போது இவ் விவகாரம் தொடர்பிலான மேலும் இரு மாணவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்