தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 October 1, 2015

Protest - SEUSL - 001
– முன்ஸிப் –

ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள், இன்று வியாழக்கிழமை கவன ஈரப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாமாண்டு மாணவிகளுக்கு, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டுமென்றும், அதுவரை வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி, இன்றைய கவன ஈர்ப்பு நடவடிக்கையில் மேற்படி மாணவர்கள்கள் ஈடுபட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த, நூற்றுக் கணக்கான ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேற்படி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட பெண் மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிருவாகத்தினரால் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் விடுதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும், இவ்வாறு பல்கலைக்கழகத்துக்கு வெளியில் வழங்கப்பட்டுள்ள விடுதி வசதிகள் பல்வேறு குறைபாடுகளைப் கொண்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், நேற்று புதக்கிழமையிரவு தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் தங்கும் நிந்தவூர் விடுதியின் குளியலறைப் பகுதியில் அடையாளம் தெரியாத சில நபர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மாணவிகள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் இன்று பல்கலைக்கழ நிருவாகத்தினரிடம் தமக்கு இரண்டு வாரத்தினுள் பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதி செய்து தருமாறும், அதுவரை, வெளி விடுதிகளிலுள்ள மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கின்றனர். ஆயினும், பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினர் தமக்கு திருப்திகரமான பதிலை வழங்காமை காரணமாகவே, இவ்வாறானதொரு கவன ஈர்ப்பு நடவடிக்கையில் தாம் குறித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும், விடுதி வசதி குறித்த தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை, தமது கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் தொடருமெனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தார்கள். Protest - SEUSL - 003
Protest - SEUSL - 005Protest - SEUSL - 004Protest - SEUSL - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்