காத்தான்குடி வரவேற்பு வளைவிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்ற, மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்டபிரதேசங்களிலுள்ள பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் போன்றவற்றுக்கான பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே, இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது.
மேயர் ரி. சரவணபவன் தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.
இதன்போது, தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணையை மாநகரசபை உறுப்பினர் தவராஜா முன்வைத்தார்.
மாநகரசபைக்குட்பட்ட பெயர் பலகைகளில் தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அரசகரும மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் அகற்றப்படல் வேண்டும் என்ற பிரேரணையை மாநகரசபை உறுப்பினர்கள் வே. பூபாளராஜா, கு. காந்தராஜா ஆகியோர் முன்வைத்தனர்.
இதற்கிணங்க, மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச எல்லையில் காணப்படும் வரவேற்பு வளைவில் உள்ள அரபு எழுத்துக்கள் அகற்றப்படல் வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக மாநகர முதல்வர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து காத்தான்குடி – மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது குறித்து தமது அறிக்கையினை முன்வைப்பதுடன், பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகர சபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.