பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த, சகோதரியின் இரத்த மாதிரியைப் பெற்று டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரும், தற்கெலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுமான சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூறு மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதியளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணமடைந்துவிட்டார் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
மரணமடைந்த பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரானின் சகோதரி, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபரினதும், சஹ்ரானினதும் டீ.என்.ஏ களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குகு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அனுமதி கோரினர்.
இதனையடுத்து சிறைச்சாலையில் இருக்கும் சஹ்ரானின் சகோதரியை அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று இரத்த மாதிரியை பெற்று, அதனை அரச ரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி, டீ.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அதன் அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்குமாறும் ரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவிட்டார்.