சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை
நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையைப் பெற்று, இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குமார சிறி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
செவ்வாய் மாலை 5.20 மணியளவில் இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது.
இதன்போது மேற்படி பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவகம் மற்றும் அங்கிருந்த கணிணி ஆகியவற்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் பள்ளிவாசல் நிருவாகத்தின் தலைவராக சஹ்ரான் ஹாசிமும், அதன் செயலாளராக அவரின் சகோதரர் ஜெய்னி ஹாசிம் என்பவரும் செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தப் பள்ளிவாசல், நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்படவில்லை என்றும், சமூக சேவை நிலையம் எனும் பெயரில் அது இயங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2017ஆம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப் பிரிவினருக்கும், மௌலவி சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றினை அடுத்து, சஹ்ரான் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையிலேயே, நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் செயற்பட்டுள்ளார் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சஹ்ரானின் சகோதரரும் காத்தான்குடியிலுள்ள அவரின் பள்ளிவாசல் நிருவாகத்தின் செயலாளருமான ஜெய்னி என்பவரும் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.