811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

🕔 March 27, 2019

கிழக்குமாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

2016.12.06 ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், கிழக்குமாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகானசபையிடம் கோரியமைக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட 456 பேரின் பெயர் விபரங்கள் அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாகாண சபையால் நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பட்டியல் அனுப்படாமல், எமக்கு வேறு ஒரு பட்டியலே அனுப்பப்பட்டது. எனவே அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு இறுதி நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து, மாகாணசபையால் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், இறுதி நேர்முகத் தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், இணைத்துக் கொள்ளப்படவேண்டிய தொண்டராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகருக்கும்படி, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் நான் விடுத்த வேண்டுகோளுக்கமைய, 811 தொண்டாரசிரியர்களை இணைத்து கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கபட்டது.

இந்த அமைச்சரவை பத்திரத்துக்கான அனுமதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் இறுதி நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் தொண்டராசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்