தலைக்கு மேல் தொங்கும் கத்தி

🕔 March 14, 2019

– சுஐப் எம் காசிம் –

புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில உணர்ச்சி பொங்குவோரின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுமாறும் ஆலோசனை பகர்கின்றன.

வில்பத்து பிரச்சினையா?அரசாங்கத்திலிருந்து வௌியேறு. சாய்ந்தமருது தகராறா? அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக சர்ச்சையா? அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசு. கண்டியா?திகனையா? அளுத்கமையா?எந்தப்பிரச்சினைக்கும் உணர்ச்சியாளர்களின் தீர்வு “பதவி துற, அரசாங்கத்திலிருந்து வௌியேறு, அழுத்தம் கொடு”-  இவையாகத்தானுள்ளன.

பேரம் பேசும் சக்திக்குப் பின்னாலுள்ள (அஷ்ரப் காலம் 1994-2000) அதிகாரத்தின் உச்ச எல்லையிலிருந்து எழும் சிந்தனைகளே இவை. அவ்வாறான சக்தி இன்றைய அரசியலில் முஸ்லிம் தரப்புக்கு உள்ளதா? உணர்ச்சி பொங்குவோர் இதையும் சிந்திக்க வேண்டுமே?

அறுவைக்காடு குப்பை பிரச்சினைகளை சமூக அவதானத்திலிருந்து விலகி எழுதும் சில எழுத்தாளர்கள் மற்றும் முகநூல் விமர்சகர்கள் – மீதொட்டமுல்லைக் குப்பைமேடு 2017 ஆண்டு ஏப்ரல் 14 அன்று சரிந்து விழுந்து, 28 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு முன்னர் இவைபற்றி ஒரு வரியேனும் எழுதவில்லையே.

புறச்சூழலில் எழும் புதிய பிரச்சினைகள் அரசியல் லாபங்களுக்காகத் தூக்கிப்பிடிக்கப் படுவதாலேயே, சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இருந்தும் தீர்க்க முடியாதுள்ளன.

அறுவைக்காடு குப்பைக்காக முஸ்லிம் எம்.பி.கள், அமைச்சர்களை மட்டும் ஏன் பதவி விலகச் சொல்கிறார்கள்? புத்தளம் மாவட்டத்திலுள்ள மூன்று சமூகங்களுக்கும் இது இன்று பிரச்சினைதானே. அண்மையில் (12ஆம் திகதி) நாடாளுமன்றத்தில் ‘கிளீன் புத்தளம்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குப்பை பிரச்சினை கூட்டத்தில் முஸ்லிம் எம்.பி.கள், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினர், புத்தளம் மாவட்ட எம்.பி.கள் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினைக்கு சமூகச் சாயம் பூசக் கூடாதென்பதேயாகும்.

பாதிக்கப்படும் சகல சமூகங்களும் நியாயம் பெறும் போராட்டத்தை முன்னெடுக்க இதில் உடன்பாடு காணப்பட்டது. இத்தீர்மானத்தில் புத்தளம்  மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான  பாலித்த ரங்கபண்டாரவின் தீர்க்கம், தௌிவு என்பன பலருக்கும் பலத்தைக் கொடுத்தது.

புத்தளம் மாவட்டத்தின் மூன்று சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ‘கிளீன் புத்தளம்’ அமைப்பு மற்றும் சர்வமத தலைவர்களின் மத்தியில் அறுவைக்காட்டு பிரச்சினையில் அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீமின் ஆகியோரின் பங்களிப்பையும் கரிசனையையும் அமைச்சர் ரங்க பண்டார சிலாகித்தத்தையும் அதற்கு முந்தைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக்கு முன்னர், தயார் படுத்தல் கூட்டத்தின் போது, அமைச்சர் ரிஷாட் கிளர்ந்தெழுந்து குரல்கொடுத்த துணிச்சலையும் அவர் எடுத்துரைத்தமையும் முக நூல் நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதற்கு மேலதிகமாக 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையை புத்தளத்தில் நள்ளிரவில் சந்தித்திருந்த சைலன்ட் வொலண்டியர் (silent volunteer) என்ற அமைப்பினர், கொழும்பு குப்பையால் எதிர் காலத்தில் புத்தளத்தில் ஏற்படவுள்ள பாரிய அனர்த்தம் தொடர்பில் விளக்கி எச்சரித்திருந்ததை கவனத்தில் எடுத்த அமைச்சர் ரிஷாட்,  அதற்கு அடுத்த நாள் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு இதனை கொண்டுவந்து தேசிய கவனத்தை ஈர்த்திருந்தார்.

அத்துடன் நின்று விடாது புத்தளம் மாவட்டத்திலிருந்து தமது கட்சி சார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் உருவாக்கி, மாவட்டத்தின் சொந்தக்குரல் ஒலிக்க வழிவகை செய்தார்.

இந்த முயற்சிகளின் வெளிப்பாடுகளே மக்கள் காங்கிரசின்  தலைமையையும் அமைச்சர் சம்பிக்கவையையும் அடிக்கடி மோத வைத்தது. அது மாத்திரமன்றி மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் இந்த பிரச்சினை தொடர்பில் கட்சிக்குள்ள பொறுப்பிலிருந்து விலகாது, ஜனநாயக அழுத்தங்களை மேற்கொண்டதையும் நினைவு படுத்த வேண்டும்.

நுனிப்புல் ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் இதன் தாற்பரியங்களை உணர்ந்து எழுதுவதே எழுத்தறிவித்த இறைவனுக்கு செய்யும் தர்மமாகும்.

ஏற்கனவே சுண்ணக்கல் அகழ்வு, நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பவற்றால் புத்தளம் மாவட்ட இயற்கை வளங்களின் அரைவாசிப் பகுதி மாசுபடிந்து மனித நுகர்வுக்கு ஒவ்வாததாகியுள்ளன. நிலக்கீழ் நீரில் மஞ்சள் நிறக் கீழ்ப் படிவு, அனல் மின் நிலைய கதிர்வீச்சுக்களால் தாவரங்கள் அழிவடைதல், இங்குள்ளோர் அடையாளம் புரியாத காய்ச்சலுக்கு உள்ளாதல், புத்தளம் கடல் வாழ் உயிரினங்களின் ஆயுள் குறைவடைதல் போன்ற பல பிரச்சினைகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு மாவட்ட குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்ட வேண்டுமா? இதற்கு பட்ஜட்டில் 7600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதேன்?

ஒரு கிலோ மீட்டருக்கு 925 ரூபா வீதம் செலவு செய்து 170 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டிற்கு 26 கொள்கலனில் குப்பைகளை கொண்டு செல்ல நாளொன்றுக்கு 04 மில்லியன் இலங்கை ரூபா மற்றும் வருடத்திற்கு 1492 மில்லியன் போக்குவரத்து செலவுக்காக இந்த புதிய திட்டத்தில் விரயமாக்கப்படுகின்றதே? நாட்டின் பொருளாதாரத்தை கணிசமான அளவு இது பாதிக்காதா?

இது பற்றிய விவாதமே ‘கிளீன் புத்தளம்’ ஏற்பாடு செய்த கூட்டத்தின் பிரதான பேசு பொருள்.

ஏற்கனவே சுண்ணக்கல் அகழப்பட்டதால் அறுவைக்காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய குழியை மூடிவிடலாம் என்ற அடிப்படை எண்ணமே இங்கு குப்பைகளைக் கொட்டும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஏன் மாற்று வழி பற்றி யோசிக்கக் கூடாதென்பது அமைச்சர்களான ரிஷாத்பதியுதீன், ஹக்கீம் ஆகியோரின் வினாக்களாகும்?

ஒவ்வொரு பட்ஜட்டிலும் இவ்வாறு கொழும்பு குப்பைகளை அறுவாக்காட்டுக்கு கொண்டு செல்வதற்கு நிதிகளை ஒதுக்குவதை விடவும் நிரந்தீர்வு பற்றி சிந்திப்பதே சிறந்தது என்கின்றன முஸ்லிம் தலைமைகள். இந்த விவாதங்கள் கொழும்பு மாவட்ட எம்.பி. களான பௌசி, முஜீபுர் ரஹ்மான், மரைக்கார் ஆகியோருக்கு சில தெளிவுகளை புலப்படுத்தியதை உணரக்கூடியதாகவும்  இருந்தது.

இதற்கு முன்னர் பெரு நகரங்கள் , மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ப்ரொஜெக்டர் முறையினாலான ஒளிப்படங்கள் மூலம் தௌிவுபடுத்தப்பட்ட திட்டங்களால் தாங்கள் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இவர்கள் தௌிவு பெற்றுள்ளனர்.

உண்மையில் அரசியலில் எதிரும், புதிருமாகச் செயற்படும் ஜனாதிபதியும், அமைச்சர் சம்பிக்கவும் குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதென்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளனர்.

இவர்களின் ஒற்றுமையை விடவும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அறுவைக்காட்டில் குப்பைகளைக் கொட்டியே ஆவது என்பதில் குறியாக உள்ளதைப் பார்த்தால், ஏதாவது ‘பிஸ்னஸ் மாபியாக்கள்’ (business mafia) இவரை வழிநடத்துவதாகவும் எண்ணத் தோன்றுகிறது.

அந்த போர்பியாவிலேயே (phobia) இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சுண்ணக்கற்களை அகழ்ந்து கொடுக்கும் ஹொல்சீம் (இன்சீ) நிறுவனத்தின் செல்வாக்குகளிலிருந்து விடுபட முடியாத அமைச்சர் சம்பிக்க, வேறு எந்த விடயங்களையும் பொருட்படுத்த மறுக்கின்றார்.

சீமெந்துக் கூட்டுத்தாபனம் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் கீழ் உள்ள நிறுவனம்தான். ஆனால் சுண்ணக்கல் அகழும் ஒப்பந்தத்தை 50 வருடங்களுக்கு ஹொல்சீம் நிறுவனத்திற்கு வழங்கிய காலத்தில், அதாவது 1993 ஆம் ஆண்டு அமைச்சர் ரிஷாத், இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கவில்லை என்பதையும் உணர்ச்சி பொங்குவோர் உணர வேண்டியுள்ளது.

வளர்ச்சியடைந்த எத்தனையோ நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மீள் சுழற்சி நடவடிக்கை பற்றி சம்பிக்க சிந்திக்கவில்லை. இச்சிந்தனை தனக்கு வேண்டிய நிறுவனங்களின் கொழுத்த வருவாயை அடைத்து விடுமென்ற அச்சமே உயர் தொழில்நுட்பத்தை நாடுவதிலிருந்து அமைச்சரைத் தடுத்துள்ளதோ? தெரியாது.

எத்தனை பெரிய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 2007 செப்டம்பரில் புத்தளத்தில் நுரைச்சோலை அனல் மின்திட்டத்தைக் (coal power) கொண்டு வந்த அமைச்சரும் இவரே. எனவே உணர்ச்சி பொங்கும் எழுத்துக்களுக்கும், சாயம்பூசி எழுதும் வர்ணப் பார்வைகளுக்கும், இந்த அமைச்சர் இலகுவில் மசியப்போவதில்லை.

அவ்வாறானால் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினைக்கு என்ன வழி? உள்ள வழியைப் பலப்படுத்துவதே பிரதான வழி? அவ்வாறு என்ன வழிதானுள்ளது? புத்தளம் மாவட்ட மக்கள் ஒன்றித்து விழப்புணர்வு பெற வேண்டும். இதற்கு முன்னர் பல தடவைகள் எச்சரித்தும் எங்களை மீறி எதுவும் நடவாது என்ற – எடுத்தெறிந்த போக்கு, இப்போது இவர்களின் தலைகளுக்கு நேரே கத்திகளைத் தொங்க விட்டுள்ளன.

Comments