பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி?
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
மாக்கந்துர மதுஷின் ரீமை தேடி வேட்டையை ஆரம்பித்திருக்கும் விசேட அதிரடிப்படையின் சீனியர் டி.ஐ.ஜி. லத்தீப் – ப்ளூமெண்டல் சங்க்கவை பின்தொடர்ந்து வலை விரித்தார்.
அந்த வலையில் சிக்கிய சங்க்க இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் ராஜதந்திர மட்டத்தில் நடந்து வருகின்றது.
நீண்ட காலம் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சங்க்கவை குறிவைத்த எஸ்.ரி.எஃப். அவரை பின்தொடர்ந்து கண்காணித்து, சரியாக நேரம் செட் ஆகியதால் அவரைப்பற்றிய தகவல்களை இந்திய பொலிஸாருக்கு வழங்கி அவரை சிக்க வைத்தது.
அதுபற்றி இந்திய தினசரி ஒன்று வெளியிட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.
மதுஷின் ரெமோ
மாக்கந்துர மதுஷ் ரத்தினக்கல் கொள்ளையிட்ட சம்பவத்தில் அதனை நவீன தொழிநுட்ப வகையில் செய்ய உதவிய முக்கிய சந்தேகநபரான ரமால் எனப்படும் ரெமோ என்பவர் பொலிஸ் வலையில் சிக்கி கைதானார்.
இப்போது அவரிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஃபோன் கடை ஒன்றை வைத்திருந்த ரெமோ, மதுஷுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்கி ஆலோசகராக செயற்பட்டு வந்தவராவார்.
வை 09 புதிய மொடல் போன் ஒன்றின் உதவியுடன் செயலி (App) ஒன்றை உருவாக்கி, அந்த ரத்தினக்கல் கொள்ளை நடந்தது முதல் – இறுதிவரை அதனை ட்ரேஸ் செய்து பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவியவர் இவரே.
ஏற்கனவே பல வேலைகளை செய்து கொடுத்து மதுஷின் அபிமானத்தை பெற்ற ரெமோ, மதுஷின் தந்தை இறந்தபோது கூட இறுதிக்கிரியைகளை மதுஷ் நேரடியாக பார்க்கும்படி செய்தவர். அதற்கும் ஒரு செயலி உருவாக்கி Wi-Fi உதவியுடன் நேரடியாக அதனை ஒளிபரப்பினார்.
அதுபோலவே இந்த கொள்ளைக்கும் உதவிய ரெமோ, போன்களை இணைத்து மதுஷும் – தாமும் அதனை கண்காணிக்கும் வகையில் வடிவமைத்திருந்தார். இந்த App தரவிறக்கப்பட்ட ஒரு ஃபோன்- மதுஷினால் அனுப்பப்பட்ட கொள்ளையர்கள் கையிலும் இருந்தது. ஆனால் இப்படியொரு App இருப்பதும் தாங்கள் பின்தொடரப்படுவதும் கொள்ளையர்களுக்கு தெரியாது.
இப்போது ரெமோவை துருவித் துருவி விசாரிக்கிறது பொலிஸ் . அதனூடாக பல உண்மைகள் கசியத் தொடங்கியுள்ளன.
நேற்று இரவும் அபி எனப்படும் கஞ்சிப்பான இம்ரானின் சகா ஒருவர் வாளுடன் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிணையாட்களை பலி கொடுத்த துரோகம்
மதுஷ் பாகிஸ்தான் தாவூத் இப்ராஹிம் ரீமுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஒழுங்காக செலுத்தவில்லை என்று முன்னர் சொல்லப்பட்டதல்லவா? மதுஷின் எதிரி என்று சொல்லப்படும் அன்னாசி மெரிலும் அப்படித்தான் பாகிஸ்தான் சப்ளையர்களை ஏமாற்றி போதைப்பொருள் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்.
போதைப்பொருள் அனுப்பவேண்டுமாயின் இரண்டு பேரை பிணையாக பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும். பொருளுக்கு பணம் வராவிட்டால் அப்படி பிணை வைக்கப்பட்ட ஆட்களின் தலை துண்டிக்கப்படும். இதுதான் பாகிஸ்தான் போதைப்பொருள் ஒரிஜினல் வர்த்தகர்களின் டீல். ஆனால் டுபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பும் டீலர்களான மதுஷ் மற்றும் அன்னாசி மெரில் ஆகியோர் இப்படி பிணைகளாக பலரை அனுப்பி ஒழுங்காக பணத்தை கொடுக்காமல் பின்னர் அவர்களை பாகிஸ்தான் வியாபாரிகள் போட்டுத்தள்ளிய வரலாறு இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் சொல்கின்றன.
பர்தா அணிந்து வந்த ஆண்கள்
இப்படியான ஒரு பின்னணியில் மதுஷை தீர்த்துக்கட்ட ஒரு கட்டத்தில் முயன்ற பாகிஸ்தான் ரீம், பர்தா அணியும் இரண்டு பெண்களை போல பங்களாதேஷ் ஆண்கள் இருவரைப் பயன்படுத்தி மதுஷை சுட திட்டமிட்ட தகவலும் வெளியாகியுள்ளது. மதுஷின் எப்பார்ட்மெண்ட் அருகில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்த காரணத்தினால், மதுஷ் அப்போது சுதாரித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் கொழும்பில் கைப்பற்றப்பட்ட 294 கிலோ ஹெரோயின் தொடர்பில் வெளிவந்த தகவல்களின்படி, ஐந்து பேர் தொடர்பில் டுபாய் பொலிஸுக்கு அறிவித்துள்ளது இலங்கை.
மதுஸுக்கு எதிரான கோஷ்டியான இவர்களை கைது செய்ய புதிய வியூகங்களை வகுத்துள்ளது பொலிஸ்.
கடத்தல் தந்திரம்
இலங்கைக்கு படகுகளில் அனுப்பப்படும் ஹெரோயின், இங்கு அவை இறங்கியவுடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு முகவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அப்படியாக வாகனங்களை கொண்டு செல்வோர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வாகனங்களை தரிக்கவைத்து அதன் சாவியை பின் ரயருக்கு கீழ் வைத்துவிட்டு செல்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யார் அதை வந்து எடுத்து செல்வார்கள் என்று வாகனத்தை பொருட்களுடன் நிறுத்திவிட்டு செல்பவருக்கு தெரியாது. யார் கொண்டு வந்து இதை நிறுத்தினார்கள் என்பது எடுத்துச் செல்பவருக்கும் தெரியாது. எல்லா ஒபரேஷன்களும் டுபாயில் இருந்தே நடக்கின்றன. அண்மையில் கொழும்பில் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் கூட, இதே பாணியில்தான் நடந்திருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கூடுதல் பாதுகாப்பு
இதேவேளை எஸ்.ரி.எஃப். சீனியர் டிஐஜி லத்தீப்புக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரி.
அதேபோல் விசேட அதிரடிப்படையினருக்கு அதிநவீன ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன. எம் 16 துப்பாக்கிகள் 500, எம்பி 05 மெஷின்கன் 250, பிஸ்டல்கள் 300 என்பனவற்றை கொள்வனவு செய்யுமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுஷ் தொடர்பான முன்னைய பதிவு: ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?