லசந்த கொலைக்கு கோட்டாதான் பொறுப்பு; நீதிமன்றில் தெரிவிப்பு
ஊடகவிலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புதாரியாக இருந்தார் என்று, அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார, விசாரணையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த சுகதபால என்பவர், இந்தத் தகவலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறியதாக, நேற்று வியாழக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், லசந்த விக்ரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர்களான கீத் நொயர் மற்றும் உபாலி தென்னகோன் ஆகியோரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவங்களின் பின்னணியிலும் அதே நபர் பின்னணியில் இருந்துள்ளார் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
விமானப் படையினரின் மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளை, லசந்த விக்ரமதுங்க வெளிப்படுத்திமையினால்தான், அவர் கொல்லப்பட்டார் என்று, அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.