பாடசாலைக்கு அருகில் குப்பை; அப்புறப்படுத்த முடியாது என்கிறார், கல்முனை மாநகரசபை ஆணையாளர்

🕔 September 21, 2015

Garbage issue - 02
– எஸ்.அஷ்ரப்கான் –

ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது ‘லீடர் அஷ்ரப்’ வித்தியாலயத்தின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால், குறித்த பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினை எதிர்நோக்குவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பாடசாலை அருகில் பாரியளவு குப்பைகள் கொட்டப்படுவதால், மேற்படி பாடசாலை மாணவர்கள் கடுமையான அசேளகரியங்களுக்கு உட்படுவதோடு, நோய்த் தாக்கங்களுக்குட்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, குப்பை கொட்டப்படுவதால், இப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும், இது விடயத்தில் கல்முனை மாநகர சபையினர் அசமந்தப் போக்குடன் நடந்துகொள்வதாக, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தெரிவித்தார்.

இது விடயமாக கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலியிடம், தான் புகார் செய்தபோது, குப்பைகளை அகற்றி – அதனை கொட்டுவதற்கு இடமில்லை என, ஆணையாளர் தன்னிடம் கூறியதாகவும் அதிபர் இல்யாஸ் கூறினார்.

இதேவேளை, இப் பகுதியால் போக்குவரத்துச் செய்வோரும், இங்கு குப்பை கொட்டப்படுவதால் கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது விடயமாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத்தை தொடர்புகொண்டு கேட்டபோது; “நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்தான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி, அவற்றினை மண்ணினால் மூடிவந்தோம். ஆனால் இடையில் சில தடங்கல்கள் ஏற்பட்டதனால் குப்பை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தற்போது மாநகர சபைக்குட்பட்ட  அதிக இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த நிலையில், மீண்டும் பழைய இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் ‘லீடர் அஷ்ரப்’ வித்தியாலயத்துக்கு அருவில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றப்படுவதற்கான நடவடிக்கையினை மாநகர சபை மேற்கொள்ளும்” என்றார்.Garbage issue - 01Garbage issue - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்