நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல்

🕔 November 16, 2018

– நேர்கண்டவர் றிசாத் ஏ. காதர் –

லகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம்.

அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக, பொருளாதார ரீதியாக மற்றும் மனோ ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அண்மைக்காலத்தில் மேற்குலக நாடுகளின் பழக்க வழக்கங்களினால் கவரப்பட்டதனால், இலங்கையிலும், மற்றைய தெற்காசிய நாடுகளிலும் நீரழிவு நோய் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

அத்துடன் எதிர்பாராத விதமாக வயதில் குறைந்தவர்களுக்கும் நீரழிவு நோய் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளது.  எனவே சமூகத்திலுள்ள அனைவரும் இந்நோய்க்கு எதிராக போராடுவதே இதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய வழிவகையாகவுள்ளது.  

இந்த நோய் பற்றி விழிப்புணர்வு இன்றுள்ள சூழலில் மிக முக்கியமாகும். 2018.11.14ஆந் திகதி சர்வதேச நீரழிவு தினமாகும். இதனை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம். அஸ்லம் அவர்களுடனான நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கு.

கேள்வி: நீரழிவு நோய் என்றால் என்ன?

பதில்: எமது உடல் அங்கமான கணையம் அல்லது சதையி (pancreas) இல் உள்ள ஒவ்வொரு Islet செல்களில் 1000 தொடக்கம் 2000 beta cells காணப்படுகின்றது. இந்த டிநவய செல்களே இன்சூலினை உற்பத்தி செய்கின்றது. நாங்கள் அன்றாடம் உண்ணுகின்ற உணவுக்கூறுகளில் காபோஹைரேட், புரதம் மற்றும் கொழுப்பு, கனிமங்கள் போன்றவை காணப்படுகின்றன. இதில் காபோஹைரேட் சமிபாட்டின் பின்னர் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது. இந்த குளுக்கோஸ் சாதாரணமாக 65 mg/dl தொடக்கம் 115 mg/dl குருதியில் காணப்படும். மேலும் சாப்பிட்டு 2மணித்தியாலயங்களின் பின் 140 mg/dl ஆகக் காணப்படும். சாதாரணமாக குருதியில் உள்ள குளுக்கோசின் அளவை கணையத்தினால் சுரக்கப்படும் இன்சுலின் என்கிற  ஹோமோன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மற்றும் குருதியில் உள்ள குளுக்கோஸ் கலங்களினுள் செல்வதற்கு இவ் இன்சூலினே தேவைப்படுகின்றது. இன்சூலின் உற்பத்தியில் குறைபாடுகள் ஏற்படும் பொழுது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுகின்றது. அதிகாலையில் எதுவும் உண்பதுக்கு முதல் எடுக்கும் குருதியில் (8 – 10மணிநேரம் fasting ) குளுக்கோசின் அளவு 126 mg/dl அல்லது 6.9mmol/l இனை அதிகமாக காணப்படும் போது இதை நாங்கள் நீரழிவு நோய் என வரையறை செய்கின்றோம்.

கேள்வி: நீரழிவு நோயின் வகைகள் பற்றி குறிப்பிடமுடியுமா?

பதில்: முதலாவது வகை இன்சூலினில் பூரணமாக தங்கியுள்ள நீரழிவு (IDDM) எனப்படும் வகையாகும். இது ஒரு Autoimmune, Idiopathic காரணம் கண்டுபிடிக்கப்படாத வகையைச் சார்ந்தது. சாதாரணமாக இது சிறுவர்களுக்கும் 35வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஏற்படும். இவர்களின் கணையத்தில் உள்ள beta cells கள் இன்சூலினை சுரப்பதில்லை. இவர்களுக்கு தினமும் இன்சூலின் ஊசி ஏற்றப்படுதல் வேண்டும். “பசுப்பாலை மிக சிறிய பராயத்தில் அருந்திக்கொள்வதால்முதலாவது வகை நீரழிவை உண்டாக்கும் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கச் செய்யும். ஆகவே குழந்தை பிறந்து 4மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பதன் மூலம் சிறுவர்களை தாக்கும் வகை ஒன்று நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைக்கலாம்.

இரண்டாவது வகை (NIDDM) என அழைக்கப்படும். இது சாதாரணமாக 35வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். இவர்களின் கணையத்திலுள்ள Beta cells  களில் இன்சூலின் சுரப்பது பாதிக்கப்படும். ஆனால் சிறிதளவு சுரக்கப்படும். அல்லது இன்சூலின் போதியளவு சுரக்கப்பட்ட போதும் அவ் இன்சூலின் பயன்படுத்த முடியாமல் காணப்படும். (predominantly insulin resistance )   இவர்களின் நீரழிவு நோயை உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகளுடன், சரியான உடற்பயிற்சி செய்வதினால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

மூன்றாவது Gestational diabetes வகையாகும். பிரசவ காலத்தின் போது தாய்மார்களுக்கு ஏற்படும் நீரழிவு நோயாகும். இது  75grm குளுக்கோசினை உண்ணக்கொடுத்து பின்னர் குருதியில் உள்ள குளுக்கோசின் அளவை சோதிப்பதன் மூலம் கண்டுபிடிக்கப்படும்.

கேள்வி: நீரழிவு நோயின் அறிகுறிகள்?

பதில்:

  1. அதிக தாகம், தொண்டை வரட்சி
  2.  சடுதியாக உடல் நிறை குறைதல்
  3. அதிகளவு சிறுநீர் பல தடவைகள் கழித்தல்
  4.  இரவில் பல தடவைகள் சிறுநீர் கழித்தல்
  5.  காயங்கள் ஏற்பட்டால் மாறுவதுக்கு அதிக நாட்கள் எடுத்தல்
  6. திடீரென கண்பார்வை மங்குதல்
  7. காரணமில்லாத உடல் களைப்பு
  8. பாலுறுப்புகளில் அரிப்பு  மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படின் நீரழிவு நோய் ஏற்பட்டிருப்பதுக்கு வாய்ப்புள்ளது.

கேள்வி: எந்தவொரு அறிகுறியும் இல்லாது நீரழிவு நோய் ஏற்படுமா?

பதில்: ஆம், மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகை நீரழிவு நோய் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய நோயாகும். இந்த நோய்நிர்ணயம்செய்யப்படும் போது கணையத்திலுள்ள 50வீதமான Beta cells இன் தொழிற்பாடு இழக்கப்பட்டுவிடும். இதன் பின்னரே அறிகுறிகள் வெளிப்படுத்தப்படலாம்.

எனவே, 30வயதை தாண்டிய ஒவ்வொருவரும் ஆறுமதங்களுக்கு ஒரு தடவை Daibatic screen பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதன் மூலம் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவை அளந்து தங்களது உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சியில் மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் வகை 2 நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தினை மாற்றியமைக்க முடியும்.

கேள்வி: யாருக்கு நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகளவு உண்டு?

பதில்: உடற் பருமனானவர்கள், உடற்பயிற்சி, சுறுசுறுப்பற்ற வாழ்க்கை வாழ்பவர்கள், பெண்களாயின் பிரசவ காலத்தின் போது குருதியில் குளுக்கோசின் அளவு கூடிக்காணப்பட்டவர்கள். குடும்பத்தில் பரம்பரையாக (பெற்றோர், சகோதரர்கள்) வழியாக நீரழிவு நோய்காணப்படுதல், அதிகளவு மன அழுத்தம் உடையவர்கள். இன்றை காலகட்டத்தில் மனஅழுத்தம் எல்லாவகையினரையும் பாதித்துள்ளது. பிழையான பழக்க வழக்கங்கள், பிழையான நண்பர்கள் மூலமாக மன அழுத்தங்களுக்கு உட்படுபவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படுவதுக்கு வாய்ப்புள்ளது.

கேள்வி: நீரழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

பதில்: முறையாக கட்டுப்பாட்டினுள் வைத்திராத நீரழிவு நோயினால் பின்வரும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதயமும் குருதிக்குளாய்களும், கண்கள், சிறுநீரகங்கள். மூளையும் நரம்புகளும், பாதங்கள் என்பனவாகும்.

கேள்வி: இவ்வாறான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்?

பதில்: மேற்குறிப்பிட்ட அங்கங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மருத்துவரை சந்தித்து, தேவையான பரிசோதனைகள் செய்து பரிந்துரைக்கப்படுகின்ற மருந்துகளை தவறாது உட்கொள்ளுதல் வேண்டும். கிரமமான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் பூரணமாக கவனம் செலுத்துதல் மிக முக்கியம்.

கேள்வி: நீரழிவு நோய்க்கும் இருதய, கொலஸ்ரோல் நோய்க்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் இருக்கிறதா?

பதில்: குருதியில் அதிக கொலஸ்ரோல் உள்ளோர் இருதய நோயினால் பாதிக்கும் சந்தர்ப்பம் அதிகம். மேலும் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுதலாக உள்ளபொழுது குருதிக்குழாய்களில் கொழுப்பு படிவதற்குரிய சந்தரப்பம் அதிகமாகவிருக்கும். இதனால் குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் கொழுப்பு படிவை குறைத்து இருதய நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கேள்வி: நீரழிவு நோயாளர்களுக்கான மருத்துவ போசணைத் (Medical Nutrition)திட்டம் எவ்வாறு அமையப்பெறுதல் வேண்டும்.

பதில்: நீரழிவு நோயளர்களுக்கான உணவுகளை திட்டமிடும் போது கலோரிப் பெறுமானங்களுக்கு ஏற்றவகையிலும், glycemic index யையும் கருத்திற்கொண்டு உணவுகளை திட்டமிடுதல் வேண்டும். கலோரிப் பெறுமானங்கள் கூடிய உணவுகளை உட்கொள்ளும் போது உடற்பருமன் அதிகரிப்பு, குளுக்கோஸ் Intolerance கொழுப்புத் தன்மை அதிகரித்தல், இரத்தக்குழாய்களில் கொலஸ்ரோல் படிதல் மற்றும் இருதநோய் ஏற்படலாம்.  

புரதம் அதிகளவு அடங்கிய மரக்கறி உணவுகள் மிகவும் பாதுகாப்பானது. சமப்படுத்தப்பட்ட saturated, polyunsaturated and monounsaturated, கொழுப்பு அமிலங்கள் சமையல் எண்ணெய்யில் காணப்படுவது நன்மை பயக்கக் கூடியதாகும்.

மேலும் மீன்களில் உள்ள எண்ணெய்கள் அதிகளவு பாவிப்பதன் மூலம் கொலஸ்ரோலின் அளவு கட்டுப்படுத்தப்படும். தற்பொழுது நீரழிவு நோயாளர்களுக்கு சிபரிசு செய்யப்பட்ட உணவானது அதிகளவு  complex காபோஹைரட், குறைவான கொழுப்புத் தன்மை, போதுமான புரோட்டின் உள்ள உணவுகளாகும்.

நீரழிவு நோயாளர்களின் மருத்துவ போசணை திட்டத்தின் பிரதான அடைவாக சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் தேகாரோக்கியத்தை கட்டியெழுப்புதல். குருதியில் உள்ள குளுக்கோசின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். குருதியில் உள்ள கொழுப்பின் அளவினை பேணுதல். உடல் நிறைக்கு ஏற்றவகையில் கலோரிப் பெறுமானமுள்ள உணவுகளை வழங்குதல். இன்சூலின் எடுக்கக் கூடிய நோயாளிகள் தங்களது பிரதான உணவுகளையும், சிற்றூண்டிகளையும், நேரத்துக்கு எடுப்பதன் மூலம் குளுக்ககோசின் தளம்பல் நிலையை பேணமுடியும்.

கேள்வி: இலங்கையில் நீரழிவு நோயாளர்கள் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இதற்குரிய காரணங்கள் என்ன

பதில்:  மேற்கத்திய உணவுப்பழக்கவழக்கங்களுக்குள் மாட்டிக்கொண்டமை, கிரமமான உடற்பயிற்சியின்மை, சமூக பொருளாதார காரணிகளின் பின்புலங்களால் அதிகளவு மன அழுத்தத்துக்குள் தள்ளப்படுதல் உணவிலுள்ள போசனை கலோரி, அதன் உள்ளடக்கம், கெழுப்புத் தன்மை பற்றிய தெளிவின்மை. பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு உடனடி உணவுப் பழக்கத்துக்குள் தங்களை திணித்துக்கொண்டமை. மதுசாரம், சிகரட் பாவனை அதிகரித்தமை போன்றனவாகும்.

கேள்வி: நீரழிவு நோயாளர்களுக்கு உங்களின் ஆலோசனை ?

பதில்: வைத்தியர் பரிந்துரை செய்கிற மருந்துகளை தவறாது எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இரத்ததில் உள்ள குளுக்கோசின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்தல் வேண்டும்.

சீனி சேர்க்கப்பட்ட எவ்வித பதார்த்தங்களையும் உண்ணாது தவிர்த்தல் இன்னும் சிறப்பு. தேனீர் அல்லது கோப்பி அருந்தும் போது அதற்கு சர்க்கரை சேர்ப்பதனை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். கொழுப்பு கூடிய உணவுகளை( பொரித்த ) குறைத்துக்கொள்ளுதல் வேணடும். பழவகைகளை அளவுடன் உட்கொள்ளுதல் வேண்டும். நார்சத்துப் பொருட்களை அளவுடன் உட்கொள்ளுதல் வேண்டும். உணவுகளை சரியான நேரத்துக்கு உட்கொள்ளுதல் அவசியம்.

அதிக வியர்வை, அதிக பசி, நடுக்கம் குருதியில் குளுக்கோஸ் குறைவாக உள்ளது என்பதுக்கான அறிகுறிகளாகும்.  உடற்திணிவுச் சுட்டெண்னை 18.5 – 22.9 Kg /m² க்கு பேண வேண்டும்.

இன்றைய காலத்தில் அதிகளவான நீரழிவு நோயளர்கள் தங்களை பூரணமாக குணப்படுத்த முடியும் என்று விளம்பரப்படுத்தப்படும் போலி மருத்துவ முகவர்களை நாடிச் செல்வது துர்பாக்கிய நிலையாகும்.

இன்றுவரை இந்த உலகிலுள்ள மருத்துவ முறைகளில் நீரழிவு வியாதியை பூரணமாக குணப்படுத்துவதுக்கு எந்த ஒரு மருத்துவ முறைக்கும், மருந்துகளுக்கும் சக்தி இல்லை என்பதனை மக்கள் உணர்ந்து கொண்டு, போலி வைத்தியர்களின் விளம்பரங்களை கண்டு ஏமாந்துவிடாமல் சரியான வைத்தியர்களிடமிருந்து சரியான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு இந்நோயினை பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் மிகச் சிறந்த நிவாரணமாகும்.  

 நன்றி: தினகரன் பத்திரிகை (14 நொவம்பர் 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்