முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது

🕔 November 2, 2018

– மரைக்கார் –

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பரமான அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரியை விட்டும் முஸ்லிம் கட்சிகள் ஏன் விலக வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம்கள் மிகப் பெரியளவில் பங்களித்தார்கள். அவரை ஜனாதிபதி ஆக்கியமைக்கான பிரதியுபகாரங்களை  முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை ஜனாதிபதியாக்கி விட்டு, முஸ்லிம்கள் வெறுங் கைகளுடன் விலக வேண்டிய அவசியம் கிடையாது.

தற்போது ரணிலுக்கும் மைத்திரிக்கும் ஏற்பட்டிருப்பது அதிகாரச் சண்டையாகும். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர். இதில் எது உண்மை, எது பொய் என்பது நமக்குத் தெரியாது.

அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதிவியிலிருந்து நீக்கியமை தொடர்பான சட்ட வலு பற்றியும் நமக்குத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களே முரண்பாடான கருத்துகளைத் தெரிவிக்கின்றார்கள்.

இந்த நிலையில், ரணிலை பதவி நீக்கியது ஜனநாயக விரோதம் என்று, எப்படி எம்மால் கூற முடியும்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீன், முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் என்கிற வகையில், முதலாவதாக மைத்திரியை ஆதரித்தார். அப்போது, அவருக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவியதையும் நாம் மறக்கக் கூடாது.

அதன் பிறகு, தபால் மூல வாக்களிப்புக்குப் பின்னராயினும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமும் மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இப்போது மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சியில் இணைந்து பிரதமர் ஆகி விட்டார் என்பதற்காக, முஸ்லிம்களின் வாக்குகளால் ஜனாதிபதியாகியுள்ள மைத்திரியையும், அவரின் ஆட்சியையும் விட்டு, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் விலகக் கூடாது.

இன்னொருபுறம், இப்போது மைத்திரி தரப்பு ஆட்சியமைக்கும் பொருட்டு, சாதாரண பெரும்பான்மைக்காகவே அலைகின்றார்கள். இந்த வேளையில் முஸ்லிம் கட்சிகள் மைத்திரியின் ஆட்சிக்கு கைகொடுத்து, முஸ்லிம் சமூகத்தின் தேவைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நமது காணிக்குள் யாரோ ஒருவர் புகுந்து விட்டார் என்பதற்காக, நமது காணியை விட்டும் நாம் வெளியேறுவதென்பது, எந்த வகையில் புத்திசாலித்தனமானது?

இங்கு நமது காணி என்பது – முஸ்லிம்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் அரசாங்கம். யாரோ ஒருவர்  என்பது மஹிந்த ராஜபக்ஷ.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்