கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 September 14, 2015

Haheem - Kalmunai - 111
– எம்.வை. அமீர் –

ல்முனை மாநகர அபிவிருத்திக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மு.கா. தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, காணிகளை இழந்தோருக்கான நஷ்டஈடுகளை வங்கி முறிகள் மூலம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்தாகவும் அவர் கூறினார்.

கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“கல்முனை நகர அபிவிருத்திக் கூட்டம் தொடர்பாக, நாம் இன்று கூட்டமொன்றினை நடத்தினோம். அதேவேளை, இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை நான் சந்தித்தபோது, கல்முனை நகர அபிவிருத்திக்கான அவரின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக் கொண்டேன்.

இதற்கிணங்க, கல்முனை நகரை விஸ்தரிப்பதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இதன்போது, தனியார் காணிகளை சுவீகரிக்க வேண்டியுள்ளது. இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும். அதாவது, இவர்களுக்கான நஷ்டஈடுகளை வங்கி முறிகளாக வழங்க தீர்மானித்துள்ளோம். இந்த முறிகளைப் பெற்றுக் கொள்வோர். அவற்றினை தமக்குத் தேவையான போது, பணமாக மாற்றிக் கொள்ளலாம். அதேவேளை, முறிகளை வைத்திருக்கும் காலப்பகுதிக்குரிய வட்டியும் வழங்கப்படும்.

இது, புது முறையிலான நஷ்டஈடு வழங்கும் திட்டமாகும் என்றும், இதை அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் என்றும் பிரதம மந்திரி என்னிடம் கூறினார்.

கல்முனை விஷ்தரிப்பு திட்டத்துக்காக, ஏற்கனவே 80 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆயினும், முழுமையாக 800 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படும். முதற்கட்டமாக, காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் உதவியோடு 200 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கரிப்பதற்கான ஆரம்பகட்ட மதிப்பீடுகளை செய்யுமாறு இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

புதிய கல்முனை நகர திட்டமிடல் பிரதேசத்தினை, நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிவித்தலாகப் பிரிசுரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதான வீதிக்கு சமாந்தரமாக, 60 அடி அகலமான மாற்று வீதியொன்றினை அமைத்து, அதனை  காரைதீவு – மாவடிப்பள்ளி வீதிக்குக் கொண்டு சேர்க்கிற திட்டமொன்றும் உள்ளது.

புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், கல்முனை பிராந்தியம் எதிர்நோக்கும் பாரிய இடத்தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும். அமையவுள்ள புதிய நகரமானது, வெள்ளம் உள்ளிட்ட அனைத்து அனர்த்தங்களுக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய, வடிவமைக்கப்படும். இங்கு, புதிய வீதிகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளும் வடிகான்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படும்.

இம்முறை வரவுசெலவு திட்டத்தில், கல்முனை அபிவிருத்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கித்தருவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார்.  அடுத்த வருடம் அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்