மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு

🕔 September 12, 2015

Haleem minister - 01
– அஷ்ரப் ஏ. சமத் –

வூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள புனித ஹரம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  விபத்தில், இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்று முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ அப்துல் ஹலீம்  தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை, அமைச்சரின் கொழும்பு  மாதிவெல இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளா் சந்திப்பிலேயே, அவர் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றவர்கள் தொடர்பில், அவதானிப்பதற்காக முஸ்லிம் சமய கலாச்சார பணிப்பாளா் நேற்று அங்கு போய்ச் சேந்துள்ளாா். அத்துடன் சவுதி அரேபியாவின் பதில் தூதுவா் அன்சார், அங்குள்ள நிலைவரம் தொடர்பில் எனக்கு தகவல்களை வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில், நடந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களுக்காக பிராத்தனையில் ஈடுபடுங்கள்.

இதேவேளை, பரகஹதெனியாவை பிறப்பிடமாகக் கொண்டு, சவூதி அரேபியாவில், அந்த நாட்டுப் பிரஜையாக வசித்து வரும், ஷேக்  சாதீக்  என்பவர், மக்காவிலிருந்து இலங்கையர்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றார். ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து பயணித்தவர்கள், விபத்து நடைபெற்ற வேளை – மதீனா நகருக்கு சென்றுள்ளனர்.

நடைபெற்ற விபத்தில்,  பாக்கிஸ்தான், இந்தியா , பங்களாதேஷ்  நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். விபத்தில் 225 பேர் காயமடைந்துள்ளதாக  அறிய முடிகிறது” என்றார்.

சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள புனித ஹரம் பள்ளிவாசலில் கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால், மேற்படி விபத்து ஏற்பட்டமை அறிந்ததே. இதில், குறைந்தது127 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இம்மாதம்  பிற்பகுதியில், ஹஜ் யாத்திரை துவங்கவுள்ள நிலையிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக, உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கானவர்கள் மக்காவுக்கு வருகை தருகின்றமை வழமையாகும்.

வருடாவருடம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால், ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர், ஹரம் பள்ளிவாசலுக்குள்  இருக்கும் வகையில், மசூதியின் பரப்பளவை 04 லட்சம் சதுர மீட்டராக விரிவாக்கும் பணிகளை சவூதி அதிகாரிகள் கடந்த ஆண்டு துவங்கினார்கள்.

இதற்கான கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த ‘கிரேன்’ ஒன்றுதான் தற்போது சரிந்துள்ளது.

கடுமையாக வீசிய காற்றின் காரணமாக, இந்த கிரேன் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அரேபியத் தீபகற்பம் முழுவதும் கடந்த வாரத்திலிருந்து புழுதிப்புயல் வீசிவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு புனித ஹரம் பள்ளிவாசல் மிக முக்கியமான புனித தலமாகும். இந்த மசூதியின் மையத்திலுள்ள கஃபாவை நோக்கித்தான் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் தொழுகையில் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு இஸ்லாமியரும், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, தன்னால் இயலும் பட்சத்தில் மக்கா வந்து ஹஜ் கடமையினை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

ஹஜ் மற்றும் உம்றா கடமைகளில் ஈடுபடும் முஸ்லிம்கள்,  ஹரம் பள்ளிவாசலிலுள்ள கஃபாவை,  எதிர் கடிகாரச் சுற்றில் ஏழு முறை வலம்வருகிறார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்