சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

🕔 September 28, 2018

‘மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள், ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள், சுற்றாடல் அமைச்சின் உயரதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு, ஊடகப்பிரிவு மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

அன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மர நடுகை நிகழ்வு குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சுற்றாடல் விழிப்பூட்டல் தொடர்பான பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவற்றை காட்சிக்கு வைத்தல் ஆகியன தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)  

Comments