வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

🕔 September 26, 2018

– றிசாத் ஏ காதர் –

றக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம், கடந்த மாதம் 04ஆம் திகதி கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், உரிய வைத்தியப் பிரிவை மீளத் திறக்குமாறு, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எழுத்து மூலம் பணிப்புரை விடுத்திருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் அந்தக் கடிதத்துக்கு அமைய, கிழக்கு மாகாண சுகாதரப் பணிப்பாளருக்கு, சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், இம்மாதம் 17ஆம் திகதி எழுதிய கடிதத்தின் மூலம் உத்தவிட்டுள்ளார்.

இது விடயமாக எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகள் அமைப்பாளர் சமீமுக்கும்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Comments