சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

🕔 September 22, 2018

– அஹமட் –

தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான் காரணம் என்று, அதாஉல்லா உறுதியாக நம்புவதனாலேயே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனது தீர்மானம் குறித்து, தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா, முக்கியமான சிலருடன் பேசியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராக மிக நீண்ட காலம் பணியாற்றி வந்த சட்டத்தரணி பஹீஜ், அண்மையில் இடம்பெற்ற அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் – கொள்கை, சட்ட விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தேசிய காங்கிரசின் சட்ட விவகாரங்களை நிறைவேற்றுவதற்கும், அந்தக் கட்சி மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் எதிர்கொள்ளும் வழக்குகளுக்காக நீதிமன்றில் ஆஜராவதற்கும் சட்டத்தரணி பஹீஜ் எவ்வித கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாமல், அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தேசிய காங்கிரசில் வகித்த பதவிகளை உதுமாலெப்பை ராஜிநாமா செய்தமையினை அடுத்து, சட்டத்தரணி பஹீஜும், தனது பதவியினை ராஜிநாமா செய்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்தமையும், அதனை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

Comments