தாகம்

🕔 July 10, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பலர் இருந்தனர்.

ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், வவுனியா மாவட்டச் செயலாளராக ஐ.எம். ஹனீபா, கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்திலிருந்து முதலாவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் பதவியை வகித்தவர் எம்.எம். மக்பூல் ஆவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். அதன்போது, இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றி சிந்தியடைந்தார். இதையடுத்து, 1967ஆம் ஆண்டு, சம்மாந்துறை பிரிவுக் காரியதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு, காணி அதிகாரி மற்றும் பிரதிக் காணி ஆணையாளர் போன்ற பதவிகளை அவர் வகித்தார். அதையடுத்து 1981ஆம் ஆண்டு, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், அதே மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக மக்பூல் பதவி உயர்த்தப்பட்டார்.

1983ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மக்பூல், தமிழர் ஆயுதக் குழுவொன்றால் அழைத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு, 30 வருடங்களுக்கும் மேலாக, அந்த இடைவெளி நிரப்பப்படாமலேயே இருந்தது.

மாவட்டச் செயலாளர் (மாவட்ட அரசாங்க அதிபர்) பதவிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர், ஆகக்குறைந்தது, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். விசேட தரத்தை நிர்வாக சேவையில் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், முதுமானிப் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.

இலங்கை முஸ்லிம்களில், இந்தத் தகுதிகளைக் கொண்ட சுமார் 15 பேர் உள்ளனர். ஆனாலும், கடந்த 30 வருடங்களாக, எந்தவொரு முஸ்லிமும் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை. இது மிகப்பெரும் இனப் புறக்கணிப்பாகும்.

இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதென்றாலும் கூட, 9.2 சதவீதமாகவுள்ள முஸ்லிம் சமூகத்திலிருந்து ஆகக்குறைந்தது இருவராவது, அந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைக் கூட, கடந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என்பது விசனத்துக்குரியதாகும்.

ஆனால், இலங்கையில் 11.2 சதவீதமாகவுள்ள தமிழர் சமூகத்தைச் சேர்ந்த நால்வர், மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர்; இது மகிழ்ச்சிக்குரியதாகும். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

நிர்வாகப் பதவிகளை முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு வழங்காமல், சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபுறம் அநீதியிழைத்து வந்த நிலையில், முஸ்லிம் சமூகத்துக்குள் அரச நிர்வாக சேவை அதிகாரிகளை, விட்டு வைக்கக் கூடாது என்பதில், தமிழர் ஆயுத இயக்கங்களும் குறியாக இருந்தன என்பதும் கசப்பான உண்மையாகும்.

அதனால்தான், முஸ்லிம் சமூகத்திலிருந்து முதலாவது மாவட்ட அரசாங்க அதிபராகத் தெரிவான எம்.எம். மக்பூல், வாழைச்சேனையைச் சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை. அஹமட், மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. ஹபீப் முஹம்மட், குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் இப்றாஹிம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நற்பிட்டிமுனை பளீல் உள்ளிட்ட பலர், தமிழர் ஆயுதக் குழுக்களால் மிகத் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு இரண்டு பக்கங்களாலும் நசுக்கப்பட்ட நிலையில், தனக்கு உரித்தான மாவட்ட அரசாங்க அதிபர் பதவியை 30 வருடங்களாகப் பெற்றுக் கொள்ள முடியாமல், புறக்கணிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், கடந்த வாரம் அந்தப் பதவியை அடைந்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கடந்த செவ்வாய்கிழமை கிடைத்தது. இதன் மூலம், முஸ்லிம் சமூகத்திலிருந்து மாவட்டச் செயலாளர் (மாவட்ட அரசாங்க அதிபர்) பதவியைப் பெற்றுக் கொண்ட இரண்டாவது நபர் எனும் பெருமையை ஹனீபா பெற்றுக் கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையைச் சொந்த இடமாகக் கொண்ட ஐ.எம். ஹனீபா, ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். 1999ஆம் ஆண்டு, இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு, அதேவருடம், நிந்தவூர் உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் காத்தான்குடி, இறக்காமம், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலாளராகப் பணியாற்றினார். இறுதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நிலையில்தான், அவருக்கு மாவட்டச் செயலாளர் நியமனம் கிடைத்துள்ளது.

நிர்வாகத்தைச் சிறப்பாக மேற்கொள்வதிலும், நெருக்கடிகளைச் சமயோசிதமாகக் கையாள்வதிலும் ஐ.எம். ஹனீபா பேர்பெற்றவராவார். பொதுமக்களுடனான உறவை எப்போதும் உயர்ந்த நிலையில் பேணுவது அவரது பண்பாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இவர் கடமையாற்றிய காலத்தில், ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின்பொருட்டு, தமது காணிகளை இழந்த மக்களுக்கு, நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் மிகவும் ஈடுபாட்டுடன் செயலாற்றியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது. மேலும், ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடி போன்ற, எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கும் கடந்த காலங்களில் இவர் ஆளாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்துக்கும் அப்பால், இன ரீதியான பாராபட்சமின்றிப் பணியாற்றுகின்றவர் எனும் நல்ல பெயரும் இவருக்கு உண்டு. அட்டாளைச்சேனையில் பிரதேச செயலாளராக ஹனீபா பணியாற்றிய காலத்தில், அவரின் நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட தீகவாபி சிங்களக் கிராம மக்களுடன், மிக நல்லதோர் உறவைப்  பேணியிருந்தார். மேலும், அந்தக் கிராமத்துக்குத் தேவையான பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இதன் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்டச் செயலாளராக ஹனீபா கடமைகளைப் பொறுப்பேற்ற நிகழ்வில், தீகவாபி பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கலந்து கொண்டு, ஹனீபாவின் நல்ல குணங்கள் பற்றிப் பேசியதோடு, “கிழக்கு மாகாணத்தின் சொத்தாக மதிக்கத்தக்க ஒருவரை, வடக்குக்கு நாங்கள் பரிசாகத் தருகின்றோம்” எனக் கூறியிருந்தார்.

அந்த வகையில், மேற்படி பதவிக்கு ஐ.எம். ஹனீபா மிகவும் பொருத்தமானவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரின் தகைமைகளும் திறமைகளும்தான் இந்தப் பதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளன. இருந்தபோதும், ‘பொன்னாலான விளக்குக்கும் ஒரு தூண்டுகோல் தேவை’ என்பது போல், மாவட்டச் செயலாளராக ஹனீபா நியமிக்கப்படுவதற்கு, சமூக அக்கறையுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் ஆதரவும் இருந்துள்ளது.

வடக்கைத் தளமாகக் கொண்ட மேற்படி அமைச்சர், முஸ்லிம் ஒருவரை, மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டுமென, நாடாளுமன்றில் உரையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், கடந்த முப்பது வருடங்களாக,  முஸ்லிம் ஒருவரை, மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கான அழுத்தங்களை, ஆட்சியாளர்களுக்குக் கொடுக்க முடியாத நிலையில்தான், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் கட்சித் தலைவர்களும் இருந்துள்ளனர் என்பதையும் இங்கு அவமானத்துடன் பதிவுசெய்ய வேண்டியுள்ளது.

ஆட்சியமைப்பதற்காகப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் கட்சிகளும், தங்களுக்கென அமைச்சுப் பதவிகளைப் பேரம்பேசிப் பெற்றுக் கொள்வதில் காண்பித்த அக்கறையில் ஒரு சதவீதத்தையேனும், முஸ்லிம் ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என்பதில் காண்பித்திருக்கவில்லை.

இருந்தபோதும், மாவட்டச் செயலாளராக இப்போது ஐ.எம். ஹனீபா நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து, அந்தப் பதவி அவருக்குக் கிடைப்பதற்கு, தமது கட்சித் தலைவர்தான் காரணம் என்று, சமூக வலைத்தளங்களில் கணிசமானோர் எழுதி வருகின்றனர். இது மிகவும் கேவலமான அரசியல் பிழைப்பாகும்.

ஐ.எம். ஹனீபாவின் நியமனத்துடன் பகிடிக்குக் கூடத் தொடர்புபடாத அரசியல்வாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள்தான் ஹனீபாவின் நியமனத்துக்குக் காரணமானவர்கள் என்று பிரசாரம் செய்கின்றமை கேவலமானதாகும்.

இன்னொருபுறம், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவரை மாவட்டச் செயலாளராகப் பெற்றுக் கொண்டதோடு, முஸ்லிம் சமூகம் திருப்தியடைந்து விட முடியாது.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நான்கு மாவட்டங்களுக்கு, மாவட்டச் செயலாளர்களாக நான்கு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை போன்று, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு முஸ்லிம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்குமாறு, ஆட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் 43.6 சதவீதமும், திருகோணமலை மாவட்டத்தில் 40.4 சதவீதமும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும், அந்த மாவட்டங்களுக்குச் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே, தொடர்ந்தும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றமை, நேர்மையற்ற செயற்பாடாகும்.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகளவு காணிப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், காணி விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை, அரசாங்கம் அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், சிங்களவர் ஒருவரை மாவட்டச் செயலாளராக வைத்துக் கொண்டுதான், முஸ்லிம்களுக்கு எதிராக, இவை போன்ற அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை கவனிப்புக்குரியதாகும்.

ஆகவே, முஸ்லிம் சமூகத்தில், மாவட்டச் செயலாளராக நியமிப்பதற்குரிய தகைமைகளைக் கொண்ட மேலும் பலர் இருக்கின்றமையாலும், இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, இன்னும் ஒருவர் அல்லது இருவர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டிய நியாயம் உள்ளமையாலும், அதை நிறைவேற்ற வேண்டும் என, ஆட்சியாளர்களுக்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தாங்கள் அமைச்சர்களாக வேண்டும் என்பதை விடுத்து, தமது சமூகத்துக்குப் பொறுப்பு வாய்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார்கள்.

அதனால்தான், தமிழர்கள் சுமார் 11 சதவீதமாக இருக்கின்ற போதும், நான்கு மாவட்டச் செயலாளர்களை அவர்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தலைகீழாகத்தான் நடந்து கொள்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்திலிருந்து, மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய நியாயம் குறித்து, இதே பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி ‘முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள்’ எனும் தலைப்பில் நாம் எழுதியிருந்தமையும் இங்கு நினைவுபடுத்துதல் பொருத்தமாகும்.

முஸ்லிம் சமூகத்திலிருந்து, மாவட்டச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டமையை அடுத்து, முஸ்லிம் மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி கவனத்துக்குரியதாகும். அவர்களின் நீண்டகால ஆதங்கத்தை அதனூடாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு சமூகத்துக்கும் நியாயமாகக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுத்தால், பிரச்சினைகள் எதுவும் இருக்காது. ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள் அதற்குத் தயாராக இல்லை என்பதால்தான், இந்தத் தேசம் இரத்தத்தால் நனைந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்த்தல் அவசியமாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (10 ஜுலை 2018) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்