சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி

🕔 May 11, 2018

– பஷீர் சேகுதாவூத் –

ந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தெரிகிறது.

மலையகத் தமிழ் மக்களின் தலைவர்களும், இலங்கைத் தமிழர் தலைவர்களும், இலங்கை முஸ்லிம் தலைவர்களும் தத்தமது இன மக்களின் வாக்குகள் இல்லாமல் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது என்று தொடர்ச்சியாக பல தடவை “குரவை” இட்டும், கொக்கரித்தும்,புலம்பியும்,மார்தட்டியும் சிங்களவர்களை விழிப்பூட்டி வருகிறார்கள்.

1989 ஆம் ஆண்டு நானும் இன்னும் 12 தோழர்களும் நாடாளுமன்றத்துள் உறுப்பினர்களாக நுழைந்து சில நாட்களில் தோழர் பாலகுமாரனின் தலைமையில் அன்றைய புதிய ஜனாதிபதியான பிரேமதாஸவைச் சந்திக்கச் ‘சுச்சரித்த’ சென்றோம்.

அங்கு, எங்கள் ஒவ்வொருவரையும் பாலா பெயர் சொல்லி ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தினார். என்னை ‘ஹீ இஸ் அவ கொம்றேட் பஷீர்’ (He is our comrade Basheer)  என்று சொன்னதும் பெயரைக் கொண்டு நான் ஒரு முஸ்லிம் எனப் புரிந்துகொண்ட பிரேமதாஸ – உடனடியாக; “நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதில் முஸ்லிம்களுக்குப் பெரும் பங்குண்டு” என்று பகிரங்கமாகக் கூறினார்.

ஜேவிபி யின் ஆயுத அச்சுறுத்தல் பாரதூரமாக நிலவிய அந்தக்கால ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதியாகத் தெரிவாகத் தேவையான அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கு அதிகமாக வெறும் 30,000 வாக்குகளையே பிரேமதாஸ பெற்றிருந்தார். இத்தேர்தலிலும் அஷ்ரஃப் மறைமுகமாக பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்கியிருந்தார். அஷ்ரஃபின் இந்த நிலைப்பாடுதான் சேகு இஸ்ஸதீனுக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாட்டின் தோற்றுவாயாகும்.

1994 இல் சந்திரிக்கா – சமாதான தேவதையாகத் தெரிந்த காரணத்தால், வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகளையும், அஷ்ரஃப் ஆதரவு வழங்கியமையால் வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றதன் மூலமே ஜனாதிபதியாக முடிந்தது.

2005 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ மிகச் சொற்ப வாக்குகளினால் வெற்றிபெற்றார். இந்த வெற்றி புலிகளின் தேர்தல் நிலைப்பாட்டாலும் அன்று சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த 30% முஸ்லிம் வாக்குகளாலும் கிடைத்ததாகும்.

இத்தேர்தலில் 70% முஸ்லிம் வாக்குகள் கிடைத்தும், வடக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காமையினால்தான், சிறிய வித்தியாசத்தில் ரணில் தோல்வியடைய நேர்ந்தது என்பதும் அனைவருக்கும் தெரிந்த வரலாறாகும்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவின் தோல்விக்கும், மஹிந்தவின் இரண்டாவது வெற்றிக்கும் கீழ்வருவன காரணங்களாகும்.

2010 இல் புலிகளின் அரசியல் பாத்திரம் இல்லாதிருந்த போதும், பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை வட மாகாணத் தமிழ் மக்கள், நிராகரித்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாதிருந்தனர். மற்றும் மஹிந்தவுக்கு இத்தேர்தலில் முஸ்லிம்களின் 50% வாக்குகள் கிடைத்ததன. இவைதான் மேற்சொன்ன இருவரின் வெற்றி தோல்வி நிலைமைகளுக்குக் காரணங்களாகும்.

2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ‘அரும்’பொட்டில் வெல்வதற்கும், மஹிந்த ‘அரும்’பொட்டில் தோற்பதற்கும் சிறுபான்மையினரின் வாக்குகளே காரணம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இக்கருத்தை மைத்திரியோ அல்லது மஹிந்தவோ கூட மறுத்துரைக்க முடியாது.

2005 இல் முஸ்லிம் வாக்குகளில் 30% த்தையும், 2010 இல் 50% த்தையும் பெற்றுக்கொண்ட மஹிந்த, 2015 இல் முஸ்லிம் வாக்குகளில் வெறும் 3% த்தை மட்டுமே பெற்றுக் கொண்டதே அவரின் தோல்விக்குக் காரணமானது.

இவ்வாறே, 90% வடக்கு – கிழக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றமைதான், மைத்திரியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது என்பதையும் புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமமானதல்ல.

ஆனாலும், வழமைபோல சிறுபான்மையினத் தலைமைகளின் பெருமிதத்தைக் காப்பாற்றுகிற சிங்கள ‘மொடரேட்’  (மிதவாத) வாக்காளர்களை சிறுபான்மைத் தலைமைகள் வசதியாக மறந்துவிடுகின்றமை எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தக் கூடும்.

சிறுபான்மைத் தலைவர்கள் தமது தலைமையைக் காப்பதற்காக அவர்களது சமூகங்களைப் ‘பெருமிதங்கள்’ எனும் நரகத்துக் குழிக்குள் தள்ளிவிடுகின்றனர்.

அடுத்த ஜனாதிபதி தனிச் சிங்கள வாக்குகளினால் மட்டும் தெரிவு செய்யப்படுவதைச் சாத்தியமாக்குவதற்கு, நமது சிறுபான்மைத் தலைமைகள் அவர்களது பெருமிதக் கோஷங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உரத்து மொழிந்தாலே போதுமானது.

மேலதிகமாக, ஜேவிபி 20 ஆவது சட்டமூலத்தை கொண்டு வந்து தோல்வி கண்டால், அக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனித்து களமிறங்கும் நிலைக்குள்ளாகும். இக்கட்சி தனித்து தேர்தலில் இறங்கினால் கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்கமைவாகப் பார்ப்போமானால், தனிச் சிங்கள வாக்குகளினால் மட்டும் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது நிச்சயமானது.

அல்லது மைத்திரியின் தப்புக் கணக்கின்படி அவர் தனித்து சுதந்திரக் கட்சியில் மூன்றாவது வேட்பாளராகக் களமிறங்கினால், தனிச் சிங்கள வாக்குகளினால் மட்டும் அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது மிகவும் இலகுவானதாகிவிடும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலோடு, நமது இன்றைய சிறுபான்மைத் தலைவர்களில் பெலும்பாலானோர் ‘இனத் தனித்துவம்’ என்ற முலாம் பூசப்பட்ட அவர்களது தனிப்பட்ட அரசியலால் இயற்கையாகக் காணாமலாவது நடந்தேறும்.

இது, எவராலோ காணாமலாக்கப்படுவதல்ல; தானாகக் காணாமதலாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்