இந்தியக் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்துக்கும், ஐ.ச.கூட்டமைப்புக்கும் தொடர்புகள் இல்லை: செயலாளர் ஹசனலி தெரிவிப்பு

🕔 April 22, 2018

– அஷ்ரப் ஏ சமத் –

க்கிய சமாதானக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகள் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் தொடர்பெதுவும் கிடையாது என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

கொழும்பில் உள்ள இந்திய உயா் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக எமது அரசியல் கட்சியான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்  பெயரைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

இந்தியாவில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாகத் தெரியவருகிறது.

இதேவேளை, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தலைவர் எனக்கூறி, மொஹமட் மிப்லால் என்பவா் கையொப்பமிட்டு மனு வழங்கியுள்ளதோடு, ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சகல பதாதைகளிலும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கு, எவருக்கும் கட்சியின் உயர்பீடம் அனுமதியளிக்கவில்லை.

ஆசிபாவுக்கு நீதி வேண்டும். ஆசிபாவை பாலியல் கொடுமைப்படுத்தி கொலை செய்தவா்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்த்பட்டிருக்கும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவும் வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.

ஆனால், எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, மேற்படி ஆர்ப்பாட்டத்தில் சில அருவருக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தலைவர் என மொஹமட் மிப்லால்  ஊடகங்களுக்கு கூறியுள்ளதோடு, அவர் கையளித்த அறிக்கைகளிலும் எமது கட்சியின் தலைவர் எனத் தெரிவித்து ஒப்பமிட்டுள்ளாா்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் தலைவர் எனும் பதவி கிடையாது. தனியாள் எவருக்கும் தலைவர் என்கிற பதவி வழங்கப்படவில்லை. தலைமைத்துவ சபைதான் எமது கட்சியில் உள்ளது.

இந்தியப் பிரதமரின் உருவப்படத்தினை காலால் மிதிப்பது மற்றும் இந்திய தேசியக் கொடியை நிலத்தில் போட்டு மிதிப்பது, உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இந்திய தேசியக் கொடி மற்றும் அந்த நாட்டு பிரதமரின் உருவப்படங்களை எரிப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்றதாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளை எமது கட்சியின் பெயரில் மேற்கொண்டமையின் மூலம், எங்களுடைய கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் எனும் வகையில் இதனைக் கண்டிப்பதோடு, இச் சம்பவங்களுக்கும் எமது கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை  என்றும், இச்சம்பவத்துக்கு எமது கட்சி பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்