கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார்

🕔 April 16, 2018

– அஹமட் –

கிழக்கு மாகாண முஸ்லிம்களை கீழ்தரமாக எழுதியமையினால் எழுந்த எதிர்ப்புக் காரணமாக, முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவி ஆகியவற்றிலிருந்து ராஜிநாமா செய்ததாகக் கூறப்படும் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரசின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்த சபீக் ரஜாப்தீன், நபரொருவரின் பேஸ்புக் பதிவுக்கு கருத்திடும் போது, கிழக்கு மாகாண முஸ்லிம்களை மிகவும் கேவலமான முறையில் சிறுமைப்படுத்தி எழுதியிருந்தார்.

இதனையடுத்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள், சபீக் ரஜாப்தீனுக்கு தமது எதிர்ப்பினையும் கண்டனங்களையும் பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி வந்தனர்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரக் காலத்தில் இந்த பிரச்சினை எழுந்ததன் காரணமாக, மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா செய்ததாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது முஸ்லிம் காங்கிர கட்சியிலுள்ள முக்கிய பதவிகளில் ஒன்றான பொருளாளர் பதவிக்கு சபீக் ரஜாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொருளாளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். அஸ்லம், தற்போது முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களை கேவலமாக தூற்றி எழுதிய சபீக் ரஜாப்தீனுக்கு, முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான பொருளாளர் பதவியை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்கியமையின் மூலம், கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் ஹக்கீம் கொண்டுள்ள எண்ணப்பாடு என்ன என்பதை, மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதாக, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மக்களின் வாக்குப் பிச்சைகளைப் பெற்று, அதனூடாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியை வகித்துக் கொண்டிருக்கும் ரஊப் ஹக்கீம்; கிழக்கு மாகாண முஸ்லிம்களை கேவலமாக திட்டி எழுதிய சபீக் ரஜாப்தீனுக்கு, மு.காங்கிரசின் பொருளாளர் பதவியை எவ்வாறு வழங்க முடியும் எனவும், மேற்படி முக்கியஸ்தர் கேள்வியெழுப்பி உள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களை ரஊப் ஹக்கீமும், அவரின் கும்பலும் மிகவும் திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றமையினை, சபீக் ரஜாப்தீனுக்கான இந்த நியமனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிவதாகவும் முஸ்லிம் காங்கிரசின் மேற்படி முக்கியஸ்தர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மு.காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளில் மாற்றங்களைச் செய்வதற்கும், அந்தப் பதவிகளுக்கு நபர்களை நியமிப்பதற்கும், கட்சியின் பேராளர் மாநாட்டில் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீம், எதேச்சதிகாரமாக மேற்படி நியமனங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்: 

01)  கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

02)  சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்