கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

🕔 January 22, 2018

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால் வருகிறீர்கள் என்று, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

சபீக் ரஜாப்தீனின் பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட கேள்வியினை அவர் முன்வைத்துள்ளார்.

“நாங்கள் தலைமை தாங்குகின்றவர்கள், நீங்கள் எப்போதும் தலைமை பின்னால் வருகின்றவர்கள்” எனவும் தனது பேஸ்புக் பக்கத்தில் சபீக் ரஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பதிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்தவர்களுடன் சபீக் ரஜாப்தீன் கருத்துக்களை எழுதி வாதிடுகையில்;

“கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்களை பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல் படிக்கட்டில் கிழக்கு மாகாணத்தவர்கள் வந்து கிடப்பீர்கள். சுனாமி காலத்தில் நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்.

மேலும் உங்களை முட்டுக் காலில் நாங்கள் மண்டியிட வைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணம் நாவல பிரதேசத்தைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன் ஒரு பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான  நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சபீக் ரஜாப்தீன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Comments