சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

🕔 April 11, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் மற்றும் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை இன்று புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஜனாதிபதியிடம் தாங்கள் அனுமதி பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, சுயகௌரவத்தை பாதுகாக்கும் வகையில், அதற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு ராஜநாமா செய்யப்படும் அமைப்சுப் பதவிகள், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்