மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

🕔 April 9, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைய வேண்டும் என்ற கடும் நிலைப்பாடு கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை நீக்க முடியாது போனால், அன்றைய தினத்தில் தேசிய இணக்க கூட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என்று நான் கூறியதில் எவ்வித மாற்றமும் இல்லை.

எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, இதில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இடையிலான கூட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்