திஹாரி வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவம்; உரிமையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 April 6, 2018

திஹாரியில் ‘நிப்பொன் செரமிகா’ எனும் பெயருடைய வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவத்தில், அந்த வர்த்தக நிலையத்தினுடைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக சேதமடைந்தது.

இதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசி ஒன்றும், வர்த்தக நிலையத்துக்கு தீ மூட்ட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் லைட்டர் ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, சிங்களவர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

மேற்படி சந்தேக நபர் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைதானார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது; வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்தான், அவருடைய கடையை எரிக்குமாறு தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். 02 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதனை தான் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே, வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இவ்வாறு தனது கடையை எரிக்குமாறு கூறியதாகவும், கைதானவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை, நேற்று வியாழக்கிழமை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்து, அத்தனகல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி வர்த்தக நிலையம் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.

தொடர்பான செய்தி: முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் திஹாரியில் தீக்கிரை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்