குடிநீர் போத்தல்களின் விலை மற்றும் நியமங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

🕔 April 6, 2018

குடிநீர் போத்தல்களின் விலை மற்றும் நியமங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

வரட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு மத்தியில், சில வியாபாரிகள் நியமங்களுக்குட்படாத  வகையிலும் அதிக விலையிலும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்கின்றமை தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வரட்சி காரணமாக குருநாகலை, புத்தளம், பொலன்னறுவை, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 01 லட்சத்து 43 ஆயிரத்து 235 குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான குடிநீர்வசதிகள் மற்றும் ஏனைய நீர் வசதிகள் தொடர்பாக உலர் நிவாரண கூப்பன்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயற்பாடுகள் குறித்து, இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நீரை பெற்றுக்கொள்ளக்கூடிய நீர் நிலைகள் வரையறுக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் நீரின் அளவு குறைந்த மட்டத்தில் இருத்தல், வன விலங்குகளின் நீர் தேவைக்காக போதுமான நீர் கிடைக்காமை மற்றும் வன விலங்குகளின் மூலம் மக்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்படும் சேதங்கள் அதிகரித்தல், மின்சார உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள், உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ள குழாய் கிணறுகளை புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை சிக்கனமாக பயன்படுத்தல் தொடர்பாக விவசாய அமைப்புகளின் ஊடாக விவசாய சமூகத்துக்கு தெளிவுபடுத்தல் போன்ற குறுகிய கால நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாபதி சுட்டிக்காட்டினார்.

வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் வரட்சி நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும்போது எழக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்