போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன்

🕔 April 6, 2018

 

முஸ்லிம் சமூகம் இனியும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களை ஆரம்பிக்க முன்வராவிடின், இந்த சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என். எம். அமீன் தெரிவித்தார்.

கல்எளிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்திய ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

கல்எளிய முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தலைவர் பொறியியலாளர் எம். . சீ. எம். சுபைர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், மேலும் பேசிய அமீன் கூறுகையில்;

இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்காக ஊடகம் இல்லை என்ற இந்த பின்னணியின் மத்தியில்தான் உங்களுக்கு இந்த கருத்தரங்கை நாங்கள் நடத்துகின்றோம். எங்களுக்கு மத்தியிலே நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். என்றாலும் கூட, முஸ்லிம் ஊடகங்களுக்கு நமது சமுதாயம்  கைகொடுப்பதாக இல்லை.

அதுதான் மௌலவி நௌபர் உரையிலே சொன்னார்,  நூற்றுக்கணக்கான பள்ளிகளை கட்டுகிறார்கள். அதாவது வேறு தேவையற்ற செலவுகளுக்கு சேர்க்கிறார்கள். சமூகத்தினுடைய இருப்பை பாதுகாக்கக் கூடிய ஊடகத்துக்கு பங்களிப்பு செய்வதற்கு இந்த நாட்டினுடைய தனவந்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள், அல்லது ஆர்வம் காட்டவில்லை. திகனையில் நடந்தது  நாளை இன்னுமொரு இடத்தில் நடக்கலாம். நடக்கக் கூடாது என்பதே எங்களுடைய பிரார்த்தனை.

அப்படியென்றால் உங்களுடைய தலைவர் கூறியது போன்று 10 சதவீதம் வாழ்கின்ற நாங்கள் எங்களுடைய நல்ல விடயங்களை நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்குச் சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கு எங்களுடைய சமூகத்திலே சிங்களத்திலே ஊடகம் வர வேண்டும். ஆங்கிலத்திலே ஊடகம் வர வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் பள்ளிவாசல்களை போட்டிக்குப் போட்டியாக கட்டுவதை விட, இன்று ஊடகங்களை உருவாக்குவதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும்.

எங்களுடைய இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இஸ்லாமிய அடிப்படையில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால், எங்களுடைய சகோதரிகளுக்கு தங்களுடைய ஆடைகளை உடுத்துக் கொண்டு வீதியில் போக முடியாத நிலை ஏற்பட்டால், இந்த பள்ளிவாசலில் இருந்து என்ன பலன்.

இந்த நாட்டிலே நான் சொன்னேன் 49 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஒரு தொலைக்காட்சி அலைவரிசை கூட இதுவரை முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இப்போதுதான் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதுவும் இன்னும் முழுமையான ஓர் ஊடகமாக மாறவில்லை.

தர்க்க ரீதியான கருத்துக்களை விதைக்கின்ற  ஊடகங்களை பாருங்கள். எத்தனை சிங்கள ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதிலே எங்களை பற்றிய நல்லெண்ணத்தை சீர்குலைக்கக் கூடிய வகையில் தங்களுடைய ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இரவு 9.00 மணி அல்லது 9.30 மணி செய்தியிலே எங்களை பற்றிய நஞ்சை விடுகிறார்கள். அடுத்த நாள் காலை எங்களுக்கு என்ன நடக்குமோ? என்று தெரியாது. அதற்கு பதில் சொல்வதற்கு எங்களுடைய கையிலே ஊடகம் இல்லை. அதற்கு எப்படி பதில் சொல்வது? எங்களுடைய நிலைமையை எப்படி சொல்வது? இந்த நாட்டுக்காக அர்ப்பணம் செய்திருக்கின்ற நிலைமைகளை எப்படி சொல்வது? இந்த நாட்டை முஸ்லிம் சமூகம் கட்டிக் காத்திருக்கிறது. இந்த நாட்டை உலகத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. என்றெல்லாம் சொல்வதற்கு எங்களுடைய கையில் ஊடகம் இல்லை.

முஸ்லிம் சமூகம் இனியும் தங்களுக்கான ஊடகங்களை சிங்களத்தில் ஆங்கிலத்தில் தமிழில் உருவாக்கத் தவறினால் இந்த சமூகத்தை பற்றிய தப்பபிப்பிராயம் நாளுக்கு நாள் வளர்க்கப்படும். இந்த சமூகத்துக்கு நாட்டுப் பற்று இல்லை, இந்த சமூகம் தங்களை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது, இந்த சமூகத்துக்கு தேசிய நோக்கம் இல்லை என்றெல்லாம் நாளாந்தம் எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுக் கெல்லாம் பதிலளிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்