இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

🕔 March 26, 2018

ண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தமாகும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது, தன்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் ராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப் போகிறதா என்று வினவியதாகவும், அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அமைச்சரவையில் காரசாரமாக விவாதித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பேஸ்புக் மீதான தடையானது இலங்கையில் முதலீட்டுத்துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது எனச் சாடியுள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தவறுகள் இருந்தாலும், அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலிடுவதை சூட்சுமமாக ஊக்குவித்தனர்.

சில முதலீடுகளுக்கு இலவசமாகக் காணியை வழங்கிய ராஜபக்ஷ அரசாங்கம், வரி விலக்கையும் வழங்கியது.

உதாரணமாக இந்தியாவின் டாட்டா குழுமத்துக்கு கொம்பனித் தெருவில் 08 ஏக்கர் காணியை அவர்கள் வழங்கினர். ஒரு பேர்ச் காணி அங்கு இரண்டு கோடிரூ பாவாகும். அந்த வகையில் அந்தக் காணியின் பெறுமதி 25 பில்லியன் ரூபாவாகும்.

கூடுதல் வரி விதிப்பும் நிவாரணிகள் இன்மையும் எமது முதலீட்டுத்துறை பின்னடையக் காரணமாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments