சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு

🕔 March 24, 2018

– முன்ஸிப் அஹமட் –

க்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கடந்த வாரம் சந்தித்து, இது தொடர்பில் பேசியதாகக் கூறப்படுகிறது.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால், அப்போது சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவினை வழங்கும் என, இதன்போது துமிந்த திஸாநாயக்கவிடம் அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

அவ்வாறு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்கும் போது, முஸ்லிம் காங்கிரசுக்கு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியொன்றும், ராஜாங்க அமைச்சர் பதவியொன்றும், இரண்டு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்க வேண்டுமெனவும், இதன்போது அலிசாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்ததாகவும் தெரியவருகிறது.

சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவை, அலிசாஹிர் மொளலானா தனியாகச் சந்தித்து இந்த விடயம் குறித்து பேசியுள்ள போதும், மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய இணக்கமின்றி இதைப் பேசியிருக்க முடியாது என, விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்