சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு

🕔 March 21, 2018

– ஏ.ஆர்.ஏ. பரீல் –

முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க இருந்துள்ளார் என்று அரசாங்கத்திலுள்ள சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்றும் உலமா சபை சுட்டிக் காட்டியுள்ளது.

“அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் என அநேகமானவை சேதத்துக்குள்ளாக்கப்பட்டன, எரித்து நாசமாக்கப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை சரியாக வழிகாட்டியதனாலேயே வன்முறைகள் தொடராத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது.

முஸ்லிம்கள் பொறுமையிழந்து பதிலடி கொடுத்திருந்தால் நாடே அழிவுக்குள்ளாகியிருக்கும் என்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் தலைமையிலான முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போது முஸ்லிம் மதத்தலைவர்கள் தொடர் பாக வெளியிட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க – கலந்துரையாடலின்போது முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் கூட்டுத் தலைமைத்துவமும் சரியான வழிகாட்டல்களும் இன்மையே முஸ்லிம் சமூகம் பல் வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தை பேராயர் கர்தினால் வழிநடத்துவது போன்று முஸ்லிம் சமூகத்தை வழிநடத்த முஸ்லிம் மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் சமூக ரீதியிலோ அல்லது தேசிய ரீதியிலோ ஏதாவதொரு பிரச்சினை எழுகின்றபோது அதனை வளரவிடாமல் அதில் தலையிட்டு அவற்றை கட்டுப்படுத்தி அவற்றுக்குரிய நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் பேராயர் கர்தினால் சரியான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார். இது போன்ற தலைமைத்துவத்தை முஸ்லிம் மதத் தலைவர்கள் வழங்குவார்களாயின், அநேக பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் கருத்துகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தொடர்ந்தும் பதிலளிக்கையில்;

“அமைச்சர் சம்பிக்கவின் நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகம் உட்பட முழு நாடும் அறியும். அவர் முஸ்லிம்க ளுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருபவர். முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி புத்தகம் எழுதியவர். முஸ்லிம் சமூகம் தொடர்பில் அவருக்குத் திடீரென ஏன் அக்கறை ஏற்பட்டது என்பது புரியவில்லை .

முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும் அதன் தலைமைத்துவம் பற்றியும் அவர் கவலைப்படத் தேவையில்லை. அவர் நாட்டில் இனவாதத்தைப் பேசாமல் இருந்தால் அது போதுமானதாகும். அவரது கருத்துக்களை உலமா சபை வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்