விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம்

🕔 March 12, 2018

விமானமொன்று நேபாளம் – காத்மண்டுவிலுள்ள ரிப்ஹுவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விமானம் ஓடு பாதையில் தவறான திசை வழியாகத் தரையிரங்கிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷ நாட்டிலுள்ள யு.எஸ் – பங்ளா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான பி.எஸ் – 211 எனும் விமானமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து இந்த விமானம் புறப்பட்டிருந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் ஊழியர்கள் உட்பட 71 பேர் பயணம் செய்ததாக, யு.எஸ் – பங்ளா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் பிரதம அதிகாரி கம்ருல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் 40 சடலங்கள் மீட்கப்பட்டன. 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தனர். இதன்போது காப்பாற்றப்பட்ட 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெருந்தொகையானோர் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். எவ்வாறாயினும் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் மாலைதீவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், விமானத்திலிருந்த 04 ஊழியர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என, இன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை என்று, ரிப்ஹுவான் சர்வதேச விமான நிலையத்தின் பொது முகாமையாளர் ராஜ்குமார் செட்டி தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் பெரும்பகுதி எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்