அம்பாறை , தெல்தெனிய கலவரங்களுக்குக் காரணம்; அமைச்சர் சம்பிக்க விளக்கம் சொல்கிறார்

🕔 March 6, 2018

ம்பாறை மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் மோதல் நிலைமை ஏற்பட முக்கிய காரணம், அங்கு பிரச்சினை ஏற்பட்டவுடனேயே அவற்றுக்கு தீர்வு காணப்படாமையாகும் என, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில், சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“அம்பாறை மற்றும் தெல்தெனிய மோதல் நிலைமைக்கு முக்கிய காரணம், பிரச்சினை ஏற்பட்டவுடனேயே அவற்றுக்கு தீர்வு காணப்படாமை ஆகும். கடந்த வாரம் அம்பாறையிலும், நேற்றைய நாள் தெல்தெனியவிலும் இடம்பெற்ற சம்பவங்களில் வெளிப்படும் தெளிவான உண்மை ஒன்று உள்ளது. அதுதான் நாட்டில் இனவாத, மதவாத மோதல் நிலையொன்று உருவாகி வருகின்றது என்பதாகும். இதற்குப் பிரதான காரணம் பிரச்சினையின் ஆரம்பத்திலேயே சட்டம், ஒழுங்கு மற்றும் பொலிஸ் பிரிவு என்பன தலையீடு செய்து தீர்க்க முன்வராமையே ஆகும்.

அம்பாறையில் உணவகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு தரப்பினரையும் கைது செய்திருந்தால், அப்பிரச்சினை வெகு தூரம் சென்றிருக்காது.

அதேபோன்று, தெல்தெனியவில் இடம்பெற்ற மரணம் தொடர்பிலும் 03 தினங்களாக ஊடகங்களில் புகைந்து புகைந்து, வன்முறையான ஒரு சூழல் உருவானது. இந்த வேளையிலும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, குறித்த மரணச் சடங்கை அமைதியான முறையில் நிறைவேற்ற சட்டம், ஒழுங்கு மற்றும் பொலிஸ் துறை செயற்பட்டிருந்தால், இந்த நிலைமை அங்கு ஏற்பட்டிருக்காது.

இந்த சம்பவங்களின் ஊடாக சிங்கள சமூகம் பாதுகாப்பாக இருக்கின்றதென யாராவது கூறுவார்களாயின் அது போலியானது. விசேடமாக தற்பொழுது எமது ராணுவம் மற்றும் சிங்கள சமூகம் என்பவற்றுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தவறான கருத்தை உறுதி செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் இன அழிப்பை மேற்கொள்பவர்கள் என தெரிவித்து எமது நாட்டை நெருக்கடிக்குள் தள்ள, சர்வதேச ரீதியில் சில அமைப்புக்கள் சதிகளை முன்னெடுக்கின்றன.

நாட்டில் நடந்து வரும் இந்த சம்பவங்கள் கூட அவர்களின் அம்முயற்சிகளைப் பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பதற்கு சிங்களவராக இருந்து நல்ல பெறுமானமுள்ள நடவடிக்கைகளைக் காட்டுவதும், சகவாழ்வுடன் நடந்து கொள்வதுமே வழியாகும்.  மாறாக, ஆவேசமான, பண்பாடற்ற செயற்பாடுகளினால் அல்ல.

மறுபுறத்தில் முஸ்லிம் எதிர்ப்புணர்வு உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும், சிரியாவிலும், ஈராக்கிலும் இடம்பெறும் நிகழ்வுகள் மட்டும்தான் எமக்கு பொதுவாக தென்பட்டாலும் கூட, மேலைத்தேய நாடுகள் ஒவ்வொன்றிலும் தினமும் முஸ்லிம் எதிர்ப்பு மோதல் இடம்பெறுகின்றன.

அண்மைக்காலத்தில், ஜேர்மன், ஒஸ்ட்ரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இடம்பெற்ற தேர்தல்களிலும், சுவீடன், பிரான்ஸ், பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளின் தேர்தல்களிலும் இஸ்லாம் எதிர்ப்பு போக்குள்ள கட்சிகளுக்கே அதிகாரம் கிடைக்கப் பெற்றது.

இலங்கையிலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் முஸ்லிம் மக்களின் வளர்ச்சி தொடர்பில் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது மறைப்பதற்குரிய விடயமல்ல. அத்துடன், மிகச் சிறிய அடிப்படைவாத இஸ்லாமியர்கள் குழு, சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமன்றி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையேயும் பாரிய அச்சம் ஏற்படக் கூடியவாறு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வருகின்றது.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் பெண் வேட்பாளர்களை, சில பகுதிகளில் அவர்கள் முஸ்லிம்களில்லை என சில அடிப்படைவாதிகள் அறிக்கை விடுத்திருந்தனர். இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பதிலும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத குறைபாடும் வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருந்தன.

அத்துடன், முஸ்லிம் சமூகத்திலுள்ள நடுநிலையானவர்கள் இந்த அடிப்படைவாதிகளின் கருத்துக்கு மறைமுகமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வரவேற்பை வழங்காதிருந்த போதிலும், பகிரங்கமாக அதனை எதிர்க்க முன்வராமையானது அடிப்படைவாதிகளுக்கு அவர்கள் வழங்கிய ஆதரவாகவே பார்க்கப்படுகின்றது.

பண்பாடற்ற முரண்பாடான அடிப்படைவாத செயற்பாடுகள் எந்த சமூகத்திலிருந்து வெளிப்பட்டாலும், பாதுகாப்புப் பிரிவு நீதியான முறையில் பக்கச் சார்பின்றி விரைவாக செயற்படுவது அவசியமாகும்.

அத்துடன், நாட்டிற்கு எதிரான சக்திகளை தோல்வியடையச் செய்வதற்காக உழைப்பது சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் உட்பட ஏனைய சகல சமூகங்களினதும் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது  அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி: டெய்லி சிலோன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்