அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி

🕔 February 22, 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிணைமுறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியமையினை அடுத்து, ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, அதனை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

அதேவேளை, குறித்த விசாரணை முடியும் வரை, ரவி கருணாநாயக்க எந்தவொரு பதவியையும் வகிக்கக் கூடாது என, பிணைமுறி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகக் குழுவும் சிபாரிசு செய்திருந்தது.

இந்த நிலையிலேயே, அமைச்சரவை மாற்றத்தின் போது புதியதொரு அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, ரவி கருணாநாயக்க கடுமையாக முயற்சித்து வருகின்றார் என்று, ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியொன்றினை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்து கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் அறிய முடிகிறது.

மேலும், பிணைமுறி மோசடி தொடர்பில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனும் நிலையில் ஜனாதிபதி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்