யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு

🕔 February 21, 2018

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணியொருவரின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையினாலேயே, கஹகொல்ல பகுதியில் – ராணுவத்தினர் பயணித்த பஸ் வண்டி தீப்பிடித்து எரிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று புதன்கிழமை சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தனவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் பதில் வழங்கினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் முதல் கட்ட விசாரணைகளை ராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறினார். மேலும் கைகுண்டு ஒன்று வெடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த பயணி ஒருவரின் பயணப் பொதியிலிருந்த கைக்குண்டு வெடித்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது பயங்கரவாதச் செயற்பாடல்ல என, ராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்