புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட்

🕔 February 20, 2018

ள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையில் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து, இன்று செவ்வாய்கிழமை மாலை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே, அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்;

“சிறுபான்மை மக்களினதும், சிறு கட்சிகளினதும் பலத்தை தகர்த்து, பெரும்பான்மை கட்சிகளில் அவர்கள் தங்கியிருக்க வேண்டுமென்ற நோக்கிலே கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாமென நாங்கள் கோரியபோதும், அதனையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் முறைமையின் விளைவுகளை நாடு அனுபவிக்கின்றது.

பெரும்பாலான சபைகளில் ஆட்சியை அமைக்க முடியாமலும், தலைவர்களை நியமிக்க முடியாமலும் அவதிப்பட நேர்ந்துள்ளது. சபைகளை எவ்வாறு அமைப்பது, யாருடன் கூட்டுச் சேர்ந்து அமைப்பது என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை காணப்பட முடியாமல் இருக்கின்றன.  

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவாலாக அமைந்துள்ளதால் மக்கள் மத்தியிலே இனம்புரியாத ஏக்கமும், ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத தன்மையும் ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தில், முக்கிய பங்காளியாக இருக்கும் நாம், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம்.

நாட்டில் ஸ்திரமான ஆட்சியொன்றுக்கு நாம் ஆதரவளிப்போம். முன்னைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு நேர்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் மற்றும் அவர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாமை ஆகியவற்றினாலேயே புதிய அரசாங்கத்தில் தமக்கு விமோசனம் கிடைக்குமென நம்பிபுதிய நல்லாட்சியை மக்கள் கொண்டு வாந்தனர். 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை எண்ணி நல்லாட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மகத்தான சாதனைகளாகவே நாம் கருதுகின்றோம். எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, நாம் கடந்த காலங்களில் வலியுறுத்தியது போன்று, இந்த முறைமை நாட்டுக்குப் பொருத்தமானது அல்ல. எனவேதான், இந்த முறைமையை அடியொட்டிய புதிய மாகாண சபை தேர்தல் முறைமையின் அரைகுறை முயற்சிகளையும் கைவிடுமாறு வேண்டுகின்றோம்.

கடந்த உள்ளூராட்சி சபையில், நாடளாவிய ரீதியில் 42 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த எமது கட்சி இம்முறை உள்ளூராட்சி சபைகளில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு 166 ஆசனங்களைப் பெற்றுள்ளது” என்றார்.

 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக், நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ். சுபைர்தீன், உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சஹீட், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், முன்னாள் உபவேந்த கலாநிதி இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்