தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ

🕔 February 8, 2018

– மரைக்கார் –

ட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமையினை அடுத்து, அந்த பதவிக்காக காத்திருந்து ஏமாந்து போன ஒருவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினை வழங்குவதாக சாணக்கிய தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ளாராம்.

இதை, அந்த அப்பாவியும் நம்பிக்கொண்டு – மீண்டும் காத்திருக்கத் தொடங்கியுள்ளார்.

வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குபவர் ஜனாதிபதி.

ஆனால், சாணக்கிய தலைவரோ, பிரதமரின் வால் பிடித்துக் கொண்டு திரிபவர். போதாக்குறைக்கு, இந்த உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னத்தில் தனது கட்சி வேட்பாளர்களையெல்லாம் சாணக்கியம் களமிறக்கியுள்ளதோடு, தேர்தல் மேடைகளில் ஜனாதிபதியை இடைக்கிடையே நையாண்டி செய்து பேசியும் வருகின்றார்.

இந்த நிலையில், சாணக்கியத் தலைவர் – தனது கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்து கொடுப்பதென்றால், ரணிலாரைப் பிடித்துத்தான் காரியம் சாதிக்க வேண்டும். ஜனாதிபதியிடம் போக முடியாது. அதுவும் இந்தத் தேர்தலுடன் சாணக்கியத்தின் பருப்புகள் மைத்திரியிடம் வேகாது.

இது இப்படியிருக்க, பிணை முறி மோசடி தோடர்பில் ரணிலாரை ஜனாதிபதி கடுஞ் சொற்களால் விமர்சித்துக் கொண்டு வருகின்றார். போகிற போக்கைப் பார்த்தால், ஜனாதிபதியின் வாள் – ரணிலாரின் கழுத்தைக் குறி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சாணக்கியத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று, அவரின் கட்சிக்காரர் ஒருவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்றினை, ஜனாதிபதி வழங்குவார் என்று நம்புவது, ஏமாளித்தனத்தின் உச்சமாகும்.

ரணிலாரினதும், அவரின் வால் பிடித்துக் கொண்டு திரிகின்றவர்களினதும் பேச்சுக்கள், பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னர் ஜனாதிபதியிடம் எடுபடாது.

ஆகவே, வெளிநாட்டுத் தூதுவர் பதவி எனும் சாணக்கியத்தின் வாக்குறுதியை நம்பி, இன்னும் கொஞ்சக் காலத்துக்கு காத்திருந்து ஆயுளைக் கழிக்க வேண்டியதைத் தவிர, வேறு எதுவும் நடக்கப் போவதில்லை.

ஆனால் பாவம், காத்திருப்பே வாழ்க்கையான அந்த மனிதர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான படிப்பு உள்ளவராவார்.

எது எப்படியாயினும், சாணக்கியத்தின் புழுகு மூட்டை பற்றி – இன்னும் புரிந்து கொள்ளாதவர்களுக்கு, இந்த தண்டனை தேவைதான் போலிருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்