சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

🕔 February 3, 2018

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் –

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அங்குள்ள வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும், பிரதான வீதியில் வழமைக்கு மாறாக மக்கள் அதிகளவில் கூடியுமிருந்தனர்.

இதன்போது, அங்கிருந்த மக்களிடம் கருத்துக் கேட்ட போது, அவர்கள் தமது உணர்வுகளை நம்மிடம் வெளியிட்டனர்.

“எமது ஊரின் ஒற்றுமைக்கு எதிரானதாகவே, ஹக்கீமுடைய இன்றைய வருகை அமைந்துள்ளது. மேலும், பிரச்சினையொன்றினை உண்டாக்கி, மக்களின் கோபத்தைச் சீண்டிப் பார்ப்பதற்காகவே, ஹக்கீம் இங்கு வருகின்றார்.

சாய்ந்தமருதில் என்ன நிலைவரம் என்பது மு.கா. தலைவருக்குத் தெரியும். அந்த நிலையில், இவ்வாறான ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கம் குறித்து எமக்கு சந்தேகம் உள்ளது.

ஹக்கீம் இன்று வரும் போது, சாய்ந்தமருது மக்களை கோபப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை சாய்ந்தமருது மக்களின் தலையில் தூக்கிப் போடுவது, மு.காங்கிரஸாரின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் வெளி ஊர்களில் இருந்தும் மு.கா. தொண்டர்களை வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்” என்றனர்.

மு.கா. தலைவரின் வருகையினையொட்டி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதிகளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள் வீதிகளிலும் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்