தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

🕔 January 3, 2018

– மப்றூக் – 

தென்கிழக்குப் பல்;கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தை கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவினை நேற்று தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் கூறினார்.

இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினை தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளதோடு, பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள பொறியியல் பீட மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, விடுதியில் தங்கியிருந்த பொறியியல் பீட மாணர்களில் கணிசமானோர் பல்கலைக்கழகத்தை விட்டும் வெளியேறியுள்ளதாகவும், ஆனால் ஒரு குழுவினர் தொடர்ந்தும் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மறியல் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் உப வேந்தர் நாஜிம் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நிருவாகப் பிரிவு இயங்கிவரும் கட்டடத்தினுள் நுழைந்து, கடந்த புதன்கிழமை முதல், தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த சேர்ந்த 05 மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிருவாகத்தினால் விதிக்கப்பட்ட வகுப்புத் தடையினை ரத்துச் செய்யுமாறு கோரி, இந்த மறியல் போராட்டத்தை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்