நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது

🕔 December 19, 2017

– முன்ஸிப் அஹமட் –

திர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றது.

அம்பாறை உள்ளிட்ட அதிகமான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், ஏறாவூரில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், சில இடங்களில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் (துஆ) இரட்டை இலைச் சின்னத்திலும், புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் மரச் சின்னத்திலும் தனது வேட்பாளர்களை முஸ்லிம் மு.காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

இவற்றில், தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கட்சியின் செயலாளராக – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனரும், அவரின் பிரத்தியேகச் செயலாளருமான எம். நயீமுல்லா பதவி வகிக்கின்றார்.

அதேவேளை, இரட்டை இலைச் சின்னத்தைக் கொண்ட ஜனநாயக ஐக்கிய முன்னணியின் செயலாளராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நசீரின் சகோதரரரான இஸட்.எம். ஹிதாயத்துல்லா பதவி வகிக்கின்றார்.

மேற்குறித்த இரண்டு கட்சிகளும் முறையே மு.கா. தலைவர் ஹக்கீம் மற்றும் ஹாபிஸ் நசீர் ஆகியோருக்குச் சொந்தமானவை என்றும், அவர்களின் பினாமிகளாவே நயீமுல்லா மற்றும் ஹிதாயத்துல்லா ஆகியோர் செயற்படுவதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் ரீதியாக பலவீனப்பட்டுள்ளமையினனாலேயே, இவ்வாறு பல சின்னங்களில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்