புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி

🕔 December 4, 2017

புற்று நோயாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட, அதிகூடிய தொகையான 15 லட்சம் ரூபாவுக்கு பதிலாக, தற்போது மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவத்துறை அமைச்சினதும் வரவு – செலவு மீதான மூன்றாவது வாசிப்பு இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்;

பாரிய சமூக பிரச்சினையாக தற்போது மாறியுள்ள சிறுநீரக நோய் சிகிச்சைக்காக, எதிர்வரும் 06 ஆம் திகதி அடிக்கல் நடப்பட வுள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலை தொடர்பாகவும், போதைப்பொருள் பிரச்சினையில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

மேலும், இலவச சுகாதார சேவைக்காக சுதந்திரமாக செயற்படுவதற்கு இன்றைய சுகாதார அமைச்சருக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் இதன்போது ஜனாதிபதி கூறினார்.

ஆயினும், ஓளடத சட்டத்தை நிறைவேற்றுகின்ற போதும், புகையிலை சட்டத்தை கொண்டு வருகின்றபோதும் சுகாதார அமைச்சர் என்ற வகையில், தான் முன்னைய ஆட்சியில் முகம் கொடுத்த சவால்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்