ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

🕔 December 4, 2017

டகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

குச்சவெளியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

“விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின் பல துணிச்சல் மிக்க பேட்டிகளை ஊடகங்களிலும் சமூகவளைதலங்களிலும் பார்த்திருப்பீர்கள். ஊடகங்களில் சிலர் காட்டும் வீரம், ஊடகங்களுக்கு வெளியே இருப்பதில்லை. ஊடகங்களில் புலியாகவும் நிஜத்தில் பூனையாகவுமே காணப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக காணமுடிந்தது.

 சில நாட்களாக அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள், கிழக்கில் அவர்களுடைய தனித்துவத்தை காட்டப் போவதாக வீராப்பு பேசி வருவதால், இத்தேர்தலை கிழக்கு மாகாணத்தில் ஐக்கியதேசிய கட்சி எவ்வாறு எதிர் கொள்ளைபோகிறது என்ற கேள்வி எம் மத்தியில் காணப்படுகிறது. அவர்கள் கூறுவதை போல் அவர்களின் தனித்துவத்தை காட்டினால், அதை வரவேற்கும் முதல் நபர் நானாகவே இருப்பேன். ஆனால் அவர்களுக்கு அந்த துணிவில்லை. திருகோணமலையில் தனித்து போட்டியிட்டு அவர்களால் வெற்றிபெற முடியாது என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனாலேயே ஊடகங்களில் இவ்வாறு வீராப்பு பேசும் அனைவரும் கடந்த சில நாட்களாக சிறிகொத்தவிலே தஞ்சமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் தனித்து போட்டியிட்டு எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்பது எமது தலைவருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அவருக்கு இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்ல வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இதனால் தேர்தல் காலங்களில் சில விட்டுகொடுப்புகளை செய்யவேண்டிய கட்டாயத்துக்கும் அவர் தள்ளப்படலாம்.

ஆகவே, தலைமையால் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுபட்டு ஐக்கிய தேசிய கட்சியை இத்தேர்தலில் வெற்றியடைய செய்ய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்