அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

🕔 December 4, 2017

– மப்றூக் –

க்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

வண்ணத்துப் பூச்சியினைச் சின்னமாகக் கொண்ட மேற்படி கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத், பிரதித் தலைவர்களில் ஒருவராக நஸார் ஹாஜி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடமிருந்து, கட்சியின் பெயர் மாற்றம் மற்றும் நிருவாகக் குழுவினர் தொடர்பில் அங்கீகாரம் வழக்கப்பட்ட கடிதத்தினை இன்று திங்கட்கிழமை பெற்றுக் கொண்ட பின்னர், ‘புதிது’ செய்தித் தளத்துக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்ட விடயங்களை, செயலாளர் நாயகம் ஹசனலி கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப்பின் கட்சி யாப்பினை அடிப்படையாகக் கொண்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி அமைப்பெற்றுள்ளது. ஆனாலும், இந்தக் கட்சிக்கு தலைவர் என்று யாரும் கிடையாது. தலைமைத்துவ சபைதான் உள்ளது. முஸ்லிம் கட்சியொன்றுக்கு தலைமை தாங்கும் தகுதி யாருக்கும் கிடையாது என்பது கடந்த 17 வருட காலத்தில் உறுதியாகியுள்ளது.

தனி நபர் ஆதிக்கத்தினால் சீரழியும் அரசியல் அவலத்திலிருந்து விடுபடுவதற்காகவே, தலைவர் என்கிற பதவியொன்றினை எமது கட்சிக்குள் இல்லாமல் செய்துள்ளோம்.

இந்த நிலையில், சமூகம் மீதான அன்பும் நேர்மையும் கொண்ட அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தயாராக உள்ளது.

எனவே, முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை எம்மோடு சேர்ந்து அரசியல் பணியாற்ற வருமாறு அன்போடு அழைக்கின்றோம்” என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பசீர் சேகுதாவூத் தவிசாளராகவும், எம்.ரி. ஹசனலி செயலாளர் நாயகமாகவும், நஸார் ஹாஜியார் உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தமையும், பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments