புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 August 10, 2015

Hakeem - Samm - 0112
– முன்ஸிப் –

மு
ஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த சமூகங்களின் அரசியல் இவ்வாறு நோக்கப்படுகின்றபோது, அவற்றில், புதுவிதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் போக்கிலும் நோக்கிலும் சில திருத்தங்கள் இருப்பதும் இன்றியமைதாததாகும் எனவும் கூறினார்.

மு.காங்கிரசின் இளைஞர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரசின் – இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைiயில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மு.கா. தலைவர் மேலும் பேசுகையில்;

மு.காங்கிரஸ் என்பது ஒரு மிதவாத இயக்கமாகும். மு.காங்கிரஸை மதவாத இயக்கமாக மாற்றுகிற சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும். மு.காங்கிரஸ் ஒரு மிதவாத இயக்கம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இஸ்லாத்திலுள்ள மிதவாதம், வேறு எங்கும் இருக்க முடியாது என்பதை உலகுக்கு நாங்கள் நிரூபிக்க வேண்டும்.

ஏனென்றால், இஸ்லாமிய அரசியல் என்பது, வெறும் வெறிபிடித்த மதவாத அரசியல் என் கூறி, இஸ்லாம் என்கிற உயரிய மார்க்கத்தை இழிவுபடுத்துகின்ற சக்திகளும் இங்குள்ளன. அவர்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மு.காங்கிரசின் அரசியலை அஷ்ரப்புக்கு முந்தியதென்றும், பிந்தியதென்றும், அதேபோன்று தமிழர்களின் அரசியலை புலிகளின் அழிவுக்கு முந்தியதென்றும் பிந்தியதென்றும் பார்க்கின்றபோது, அந்த அரசியலிலே புது விதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அவற்றின் போக்கிலும் நோக்கிலும் சில திருத்தங்கள் இருப்பது இன்றியமைதாததாகும்.

புதிய இலங்கை, புதிய நாடு, புதிய சுபீட்சம் என்று பார்க்கிற போது, எங்களுடைய கொள்கை கோட்பாடுகளிலே சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, எங்களிடையே கருத்தாடல்கள் அவசியமாகிறது.

புதிய தொழில்நுட்ப யுகம் உருவாகியிருக்கின்ற சூழலில், வெறும் கூட்டங்களை நடத்தி அரசியல் செய்ய முடியாது. சமூக வலைத்தளங்களினூடான அரசியல் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது.

தெற்கிலே உள்ள, அப்பாவி நாட்டுப்புற பௌத்த சிங்கள மக்களை, வெறும் கோசங்களின் மூலம் உசுப்பேற்றி, இந்த நாட்டிலே வாழுகின்ற சகோதர சமூகங்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மறுதலிக்கின்ற வங்குரோத்து அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

அதற்கு நாங்கள் சற்று சாணக்கியமாகவும், பக்குவமாகவும், நேர்மையாகவும் எங்கள் கொள்கைகளை – மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

இதற்காக, சரியான அனுகுமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். சரியான விடயத்தை சரியான நேரத்தில்தான் செய்ய வேண்டும். ‘சரியான தீர்மானத்தை பிழையான நேரத்தில் எடுக்கப்போனால், அது, பிழையான தீர்மானமாகவே போய்விடும்’ என்று மு.காங்கிரசின் மறைந்த தலைவர் கூறிய தாரக மந்திரமானது, முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவின்போதும், ஆழமாகக் கருத்தில் எடுக்கப்படுதல் அவசியமாகும்.

எடுத்தவற்றுக்கெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டும், தான்தோன்றித்தனமாகவும் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமலும் அரசியல் செய்கின்றமையினையும் விட்டு விடவேண்டும்.

நமது ஒவ்வொரு சொல்லும், செயலும் அடுத்த சமூகத்துக்கும், அடுத்த யுகத்துக்கும் சாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் நம்மை மாற்றிக் கொள்தல் அவசியமாகும்’ என்றார்.Hakeem - Samm - 0111

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்